1.05 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

4 weeks ago 8

ஆண்டிபட்டி: 1.05 ஏக்கர் நிலங்களின் பாசன வசதிக்காக, வைகை அணையில் நேற்று தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இந்த அணையானது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசன, குடிநீர் தேவைக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. கடந்த வாரத்தில் தேனி மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், மாவட்டத்தில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து, அணையின் நீர் மட்டம் கடந்த 18ம் தேதி 62 அடியை கடந்த நிலையில், மீண்டும் ஒரு போக பாசனத்திற்காக அணையிலிருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்று அணையிலிருந்து நீர் திறப்பு 1,669 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 64.37 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,900 கனஅடியாகவும், நீர் இருப்பு 4,492 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

ஒரு போக பாசனப் பகுதிக்கு ஆண்டில் 120 நாட்கள் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன் படி கடந்த செப்.15ம் தேதியிலிருந்து 45 நாட்கள் தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து முறைப்பாசன அடிப்படையில் நீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் அணை நிரம்பி வருவதாலும், ஒரு போக பாசனப் பகுதிகளில் மழை இல்லாததாலும் தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதிகளில் உள்ள சுமார் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post 1.05 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article