எடப்பாடி சொல்வது தவறு; மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் ஒன்றிய அரசு: அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்

2 hours ago 2

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அளித்த பேட்டி:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டில் நிதி நிலைமை மோசமாக உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியது வேடிக்கையாக உள்ளது. பொருளாதாரம் குறித்து அடிப்படை தெரியாதவர்தான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை முன்வைக்க முடியும். நிதிக்குழுதான் எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது. தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது. 2021ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 2000 கோடியாக இருந்த பட்ஜெட் தற்போது ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2021-22ம் நிதி ஆண்டில் 28.7 சதவீதம் கடன் பெறலாம் என நிதிக்குழு நிர்ணயம் செய்த நிலையில், 27.01 சதவீதம் மட்டுமே கடன் பெறப்பட்டது. ஒவ்வொரு நிதி ஆண்டும் நிதிக்குழு நிர்ணயம் செய்துள்ள அளவைவிட குறைவாகவே கடன் பெற்றுள்ளோம். நிதி நிலைமையை கட்டுக்குள் வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை நிதி பகிர்வில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.

ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு தேவையான நிதி வழங்க வேண்டும். வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் மெட்ரோ திட்ட பணியை ஒன்றிய அரசு துவக்கி வைத்தது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதற்காக ரூ.26 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒன்றிய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கும் தமிழக அரசே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அரசு தனது சொந்த நிதியையே பயன்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் கடன் சுமை அதிகரிக்கிறது.

அதிமுக திட்டத்தை திமுக முடக்கவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை அவர்களது ஆட்சியில் மக்களுக்கு வழங்காமல் நிலுவையில் வைத்துவிட்டு சென்றார்கள். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post எடப்பாடி சொல்வது தவறு; மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் ஒன்றிய அரசு: அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article