சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் ஆர்யா கவுடா சாலையில் உள்ள இந்தியன் வங்கி எதிரே சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் பைக்கில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அசோக் நகர் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். போலீசாரின் ரோந்து வாகனத்தை பார்த்ததும் 2 வாலிபர்கள் பைக்கில் அவசர அவசரமாக புறப்பட்டு செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த பைக்கில் கட்டுக்கட்டாக ரூ.10.57 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. பணத்திற்கான ஆவணங்களை போலீசார் கேட்டபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தனர். இதனால் 2 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அபு பைசல்(35) மற்றும் முகமது அசாருதீன்(27) என்றும், இருவரும் திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருப்பது தெரியவந்தது.
ராமநாதபுரத்தை சேர்ந்த ரிஸ்வான் என்பவர் எங்களிடம் மண்ணடி, பர்மா பஜார் உள்ளிட்ட இடங்களில் பணத்தை வாங்க சொல்வார். பிறகு அவர் கூறியபடி வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று தெரிவித்தனர். அதேநேரம் பிடித்த அபு பைசல் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் படி ரிஸ்வானை போலீசார் தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10.57 லட்சம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அளித்துள்ளனர். அதேநேரம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் பிடிபட்ட 2 வாலிபர்களிட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மேற்கு மாம்பலத்தில் கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா என 2 வாலிபர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.