
கொச்சி,
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் தீவிரவாதியாக நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான தசரா படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். அவ்வப்போது பரபரப்பான செய்திகளில் அடிபடும் சாக்கோ சில வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் போதைப் பொருள் பயன்படுத்தினார் என்று கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் மீது மலையாள நடிகை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்து இருந்தார்.சூத்ரவாக்கியம் படத்தின் படப்பிடிப்பின்போது, ஷைன் டாம் ஷாக்கோ போதையில் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பிலிம் சேம்பர் மற்றும் உள் புகார்கள் குழுவிடம் புகாரும் அளித்து இருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஷைன் டாம் சாக்கோ.
கொச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த ஷைன் டோம் ஷாக்கோ, தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹோட்டலுக்கு போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் ரெய்டுக்கு வந்த நிலையில், அவர்களிடம் இருந்து தப்பும் வகையில், இரவு 11 மணியளவில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே அறிந்து அவர் தப்பியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஹோட்டலின் ஜன்னல் வழியே வெளியேறி அவர் தப்பி ஓடும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஷாக்கோ தங்கியிருந்த ஹோட்டல் அறையில் போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை. ஷாக்கோவுடன் தங்கியிருந்த பெண் ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "கொச்சியில் உள்ள ஹோட்டலுக்கு நேற்று காலை 5.30 மணிக்கு ஷாக்கோ வந்து இருக்கிறார். பின்னர் சற்று நேரத்தில் அவருடைய பெண் தோழி தனியாக வந்து வேறொரு அறையை புக் செய்து இருக்கிறார். அன்று மாலை இருவரது நண்பர்களும் ஹோட்டலுக்கு வந்துள்ளனர். அன்று மாலை கிடைத்த ரகசிய தகவலின் படி சிறப்பு குழு ஹோட்டலுக்கு ரெய்டு சென்றது. ஆனால் அங்கிருந்து ஷாக்கோ தப்பிவிட்டார்" என்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கொச்சி காவல்துறையினர் கடவந்த்ரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்திய சோதனையின்போது, கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த ஷைன் டாம் சாக்கோவையும் அவருடன் சேர்த்து மாடலிங் செய்து வந்த நான்கு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.