![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/30/36511967-collectoor33.webp)
ஜெய்ப்பூர், -
பொதுவாக மாவட்ட கலெக்டர்களின் குறை தீர்க்கும் முகாம்களில் வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, ஓய்வூதியம், மின் இணைப்பு போன்றவை கேட்டே பெரும்பாலும் மக்கள் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர், ஹெலிகாப்டர் கேட்டு கலெக்டரிடம் விண்ணப்பித்து இருப்பது அதிகாரிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அங்குள்ள பார்மர் மாவட்ட கலெக்டர் தினா தபி, ஜோர்புரா கிராமத்தில் இரவு நேர குறை தீர்க்கும் முகாம் ஒன்றை நேற்று முன்தினம் நடத்தினார். இதில் மங்கி லால் என்பவர் பங்கேற்று கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர், 'எனது வீட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து கடந்த சில நாட்களாக அதில் விவசாயம் செய்துள்ளனர். இதனால் வீட்டுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நான் வீட்டுக்கு சென்று வர ஹெலிகாப்டர் ஒன்றை வழங்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்பார்த்த கலெக்டருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே தாசில்தார் பத்ரிநாராயணனை அழைத்து, இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி மங்கி லால் வீட்டுக்கு சென்ற ஆய்வு செய்த தாசில்தார், ஆக்கிரமிப்பாளர்ளிடம் 3 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மங்கி லாலின் விண்ணப்பம் அதிகாரிகளுக்கு வினோதமாக தெரிந்தாலும், தனது பிரச்சினை தீர்ந்ததை நினைத்து அவர் நிம்மதி பெருமூச்சு விட்டு உள்ளார்.