
சென்னை,
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படுபவர் ஷங்கர். ஜெண்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர் அடுத்தடுத்து காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன் என வரிசையாக பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குனராக கொண்டாடப்பட்டார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் - 2, கேம் சேஞ்சர் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இயக்குdர் ஷங்கருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ஐஸ்வர்யா சினிமா பக்கம் வராமல் விலகி உள்ளார். இளைய மகள் அதிதி ஷங்கர் 'விருமன்' படத்தின் மூலம் அறிமுகமாகி 'மாவீரன், நேசிப்பாயா' ஆகிய திரைப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தெலுங்கு சினிமாவில் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித் ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். ஏ. ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் 'மதராஸி' படத்தில் பணியாற்றியும் வருகிறார். இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி அர்ஜித் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். அவர் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தை பிரபுதேவா இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.