ஸ்ரீநகர்:
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, நேற்று முன்தினம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லா ( வயது 64) கொல்லப்பட்டார். 32 வருடங்களாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்த ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது, அந்த அமைப்புக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
ஹசன் நஸ்ரல்லா மறைவுக்கு 5 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அறிவித்தார். மேலும், நஸ்ரல்லாவின் மரணம் பழிவாங்காமல் போகாது என்றும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் ராணுவம் கொன்றதை கண்டித்து இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. பட்காமில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் ஏராளமானோர் பங்கேற்று ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதேபோல் ஸ்ரீநகரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஹசனாபாத், ரெய்னாவாரி, சைதாகடல், மீர் பெஹ்ரி மற்றும் அஷாய்பா ஆகிய பகுதிகளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக முழக்கமிட்டனர். போராட்டக்காரர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தியிருந்தனர்.