‘இதென்ன பேன்ட்?’ என பல செலிபிரிட்டிகள் ஏன் தற்போதைய ‘கோலி சோடா’ வெப் சீரீஸில் ஷ்யாம், புகழ் அணிந்து வந்தபோதே வீட்டுப் பெரியவர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்டிருப்பர். ஏன் நடனக்கலைஞர்கள் பலரும் இந்த பேன்ட் அணிந்து நடனம் ஆடுவதைப் பார்த்திருக்கிறோம். நமக்கும் அதே சந்தேகம், ஆம் இதென்ன பேன்ட்? இப்படி ஒரு கேள்வியுடன் செலிபிரிட்டி காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் பேன்ஸி ராஜாவைக் கேட்டோம்.
‘டர்கிஸ் (துருக்கி) பேன்ட் அல்லது ஹாரம் பேன்ட்’னு சொல்லலாம். 19ம் நூற்றாண்டுகள்ல அல்ஜீரியா, துருக்கி, ஈரான், ஈராக் மாதிரியான மத்திய கிழக்குப் பகுதி நாடுகள்ல இருந்து வந்த டிரெண்ட். மத்தியக் கிழக்குன்னாலே பெரும்பாலும் முஸ்லிம் நாடுகள் தான். அவங்களைப் பொருத்தவரைக்கும் உடல் வளைவுகளைக் இந்த ஹாரெம் பேன்ட் காட்டாது, மேலும் லூசாக உடலை உறுத்தாத வகை பாட்டம்களாக இருக்கும். இதுக்கு பெரும்பாலும் காட்டன் அல்லது ஆர்கானிக் மெட்டீரியல்கள்தான் பயன்படுத்துவாங்க. உடுத்தியிருப்பதே தெரியாத அளவுக்கு ரொம்ப வசதியா இருக்கும். அதனாலேயே இந்த பேன்ட் அப்படியே பரவி, வெஸ்டர்ன் நாடுகள்லயும் கால்பதிச்சது. இந்த உடலைக் காட்டாத, அதே சமயம் உடலை இறுக்கிப் பிடிக்காத எந்த உடையும் ஆசிய மக்கள் யோசிக்காம உடுத்துவாங்க.
காரணம் கொளுத்தும் வெயில், அதில் சில இடங்களில் அடிக்கடி போர் என எப்போதும் ஓடுவதுக்கும் தயார் நிலையில் இருப்பது அவசியம். என்பதாலேயே ஸ்கர்ட் பாணியில் இல்லாமல் இந்த ஹாரெம் பேன்ட்களை அணிவதுண்டு. அப்படிதான் பட்டியாலா பேன்ட், பெல்லி டான்ஸ் வகை பேன்ட்கள் அவங்க கிட்ட பிரபலம் ஆச்சு. அதில் இந்த பாட்டியாலா, வேஷ்டி பேன்ட்கள் இதில இருந்து மாறி புது ட்ரெண்டா வந்த பேன்ட்தான் பேன்ட் கூட டியூப் டாப், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், டெனிம் கோட் இப்படி எந்த ஸ்டைல்லயும் போட்டுக்கலாம். நம்ம ஊருல பெரும்பாலும் டான்ஸர்கள் லூஸான டி-ஷர்ட், ஷார்ட் டாப் கூட மேட்ச் செய்துக்கறாங்க. இதுக்குன்னு தனி அளவுகள் கிடையாது. சிலர் கணுக்கால் மட்டும் சரியா பிடிச்சிக்குற மாதிரி போட்டுக்குவாங்க. சிலர் முட்டி வரை, லூசா இப்படி விதவிதமா போட்டுக்குறாங்க. அதில் தொடைப்பகுதி வரை லூசான பேன்ட்கள கேமோ பெண்ட்ஸ்னு சொல்வோம்’ என்னும் பேன்ஸி இந்த பேன்ட்களை யாரெல்லாம் எப்படி அணியலாம் எனப் பகிர்ந்தார்.
‘இந்தப் பேன்ட் லூசான பாட்டம்வேர் என்கிறதால யார் வேணும்னாலும் எப்படியும் மேட்ச் செய்துக்கலாம். பப்ளி பெண்கள் அல்லது கிளாமர் என் சாய்ஸ் இல்லைன்னு சொல்ற பெண்கள் மேல குர்தா அதன் கூட ஒரு சின்ன ஸ்டோல் பயன்படுத்தி கூடவே ஆன்டிக் நகைகள் போட்டுகிட்டா பக்கா மேட்ச். அதுவும் இப்போ இந்த ஹாரெம் பேன்ட் ஜம்ப்சூட்டா மிகப்பெரிய ட்ரெண்டாகி இருக்கு. முக்கியமா ஹாட் சம்மர் கலெக்ஷன்ல குழந்தைகளுக்கு இந்த ஹாரெம் பேன்ட் பேட்டர்ன் ஜம்ப்சூட்கள் போட்டா வசதியா இருக்கும். இந்த பேன்ட் கூட ஆக்ஸிடைஸ்ட் அல்லது ட்ரைபல் நகைகள் ரொம்ப சிறப்பான மேட்சா இருக்கும். அல்லது இந்த ஃபங்கி நகைகள் பயன்படுத்தலாம். காலணிகளும் ஹை ஹீல், ஸ்டில்டோஸ் இப்படியெல்லாம் ஹெவியா இல்லாம ஃப்ளாட் செருப்புகள், மொஜாரி, ஜூட்டி காலணிகள் கூட மேட்ச் செய்யலாம். நம்ம ஊரு வெயிலுக்கு இந்த உடை சரியான தேர்வாவும் இருக்கும். ஒரே ஒரு சிக்கல்தான் ‘இதென்னப்பா பேன்ட்?’ இப்படிக் கேட்கற கேள்விக்கு மட்டும் சரியா பதில் சொல்லத் தெரிஞ்சா போதும்’. இந்த பேன்ட் இந்தியாவைப் பொருத்தவரை சினிமா பிரபலங்கள் மற்றும் நடனக் கலைஞர்களால் அதிகம் விரும்பப்படுவதாகச் சொல்கிறார்.
– ஷாலினி நியூட்டன்
The post ஹாரெம் பேன்ட் appeared first on Dinakaran.