ரூர்கேலா: ஒடிசாவின் ரூர்கேலா நகரில் நடந்த பரபரப்பான ஹாக்கி இந்தியா லீக் சாம்பியன் இறுதிப் போட்டியில் ஐதராபாத் டூபான்ஸ் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஹாக்கி இந்தியா லீக் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இப்போட்டியில் ஷ்ராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணியும், ஐதராபாத் டூபான்ஸ் அணியும் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டியதால் விறுவிறுப்பாக இருந்தது. போட்டி துவங்கி 9வது நிமிடத்தில் ஐதராபாத் அணியின் கோன்ஸலோ பெய்லட், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் அடித்து அந்த அணி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதன் பின் பெங்கால் டைகர்ஸ் அணியினர் கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். 25வது நிமிடத்தில் அந்த அணியின் ஜுக்ராஜ் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தது.
ஆனால் அடுத்த ஒரு நிமிடத்தில் ஐதராபாத்தின் அமன்தீப் லக்ரா பெனால்டி கார்னர் வாய்ப்பாக கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அடுத்தடுத்த நிமிடங்கள் பார்வையாளர்களை நாற்காலி நுனியில் அமரச் செய்யும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தின. 32 மற்றும் 35வது நிமிடங்களில் ஜுக்ராஜ் சிங் அடுத்தடுத்து கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். இதனால், ஆட்டம் பெங்கால் வசம் 3-2 என்ற கணக்கில் திரும்பியது.
இருப்பினும் 39வது நிமிடத்தில் கோன்ஸலோ மீண்டும் ஒரு கோலடித்து ஆட்டத்திற்கு திகிலுாட்டினார். 3-3 என்ற சமநிலையில் டிரா நோக்கி போட்டி சென்று கொண்டிருந்தபோது, 54வது நிமிடத்தில் பெங்காலின் சாம் லேன் வெற்றி கோலை அடித்தார். அதன்பின் யாராலும் கோலடிக்க முடியாததால் 4-3 என்ற கோல் கணக்கில் பெங்கால் டைகர்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் விழுந்த அனைத்து கோல்களும் பெனால்டி கார்னர் முறையில் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஹாக்கி இந்தியா லீக் திக்… திக்… இறுதியில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்கால் சாம்பியன் appeared first on Dinakaran.