ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!

3 hours ago 2


ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஹரியானாவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. 90 சட்டமன்ற தொகுதிகளில் 101 பெண்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் நயாப் சிங் சைனி, துஷ்யந்த் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்ப்ட உள்ளன.

இதில் 464 பேர் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். 100 வயதை கடந்த 8,821 பேர் உட்பட 2,03,54,350 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்த வாக்காளர்களில் 1,07,75,957 ஆண்கள், 95,77,926 பெண்கள், 467 திருநங்கைகள். 5,24,514 வாக்காளர்கள் 18 முதல் 19 வயதுடையவர்களும் அடங்குவர். 115 வாக்குச்சாவடிகள் முழுக்க முழுக்க பெண் ஊழியர்களாலும், 87 மாற்றுத்திறனாளி பணியாளர்களாலும், 114 வாக்குச்சாவடிகள் இளைஞர்களாலும் நிர்வகிக்கப்படுகின்றன.

மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதற்காக 30,000 காவல்துறையினரும், 225 துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 20,632 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3,460 வாக்குச் சாவடிகள் முக்கியமானவை எனவும், 138 வாக்குச் சாவடிகள் ஆபத்து நிறைந்தவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், 507 பறக்கும் படைகள், 464 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 32 விரைவு பதில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,156 ரோந்துக் குழுவினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

The post ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.! appeared first on Dinakaran.

Read Entire Article