காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் மீண்டும் தலைதூக்கிய வடகலை-தென்கலை மோதல்: பக்தர்கள் கடும் அவதி

2 hours ago 3

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். கோயில்களின் நகரம் என சிறப்பு பெற்ற காஞ்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் திவ்ய பிரபந்தம், வேத பாராயணம் பாடுவதில் வடகலை- தென்கலை பிரிவினரிடையே ஆண்டாண்டு காலமாக பிரச்னை நீடித்து வருகிறது.

இது சம்மந்தமான வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, கோயில் விழாக்களில் தென்கலை – வடகலை என இரு பிரிவினரும் கோஷ்டிகள் பாட கூடாது என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடந்த மே 11ம்தேதி வரதராஜபெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 3ம் நாளான கடந்த 13ம்தேதி கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, வடகலை – தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், 5ம் நாளான நேற்று வரதராஜபெருமாள் மோகினி அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் வந்துகொண்டிருந்தபோது, கோயில் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி தென்கலை பிரினவினர் வேத பாராயணம் செய்தனர். இதனால், இருபிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வரதராஜபெருமாள் வீதியுலா நிகழ்ச்சியில் சுற்றிலும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர் என்பதை கூட பார்க்காமல் – வடகலை தென்கலை என இரு பிரிவினரும் மாறி மாறி தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, சிவகாஞ்சி போலீசார் சமரசம் செய்தபோது, கோயில் வளாகத்தில் மட்டுமே வேத பாராயணம் பாட தடை உள்ளது. வெளியிடங்களில் பாடத் தடை இல்லை என்று தென்கலை பிரிவினர் வாதிட்ட நிலையில், தென்கலை பிரிவினர் வேத பாராயணம் செய்தால், வடகலை பிரிவினராகிய நாங்களும் வேத பாராயணம் செய்வோம் என 2 தரப்பினரும் போட்டி போட்டுக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் மீண்டும் தலைதூக்கிய வடகலை-தென்கலை மோதல்: பக்தர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article