ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு உடல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி: பொது சுகாதாரத்துறை தகவல்

2 weeks ago 3


சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு மொத்தம் 1,75,025 பேர் செல்ல இருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் இருந்து 5,657 பேர் செல்ல உள்ளனர். ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஓஎம்எம்வி தடுப்பூசிகள் (QMMV – Quadriwalent Meningococcal Meningitis Vaccine) 8,025 டோஸ்கள் மற்றும் எஸ்ஐவி தடுப்பூசிகள் (Seasonal influenza Vaccination) 1,452 டோஸ்களை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. அது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஹஜ் குழு பரிந்துரைத்த 37 மாவட்டங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் 41 இடங்களில் உடல் தகுதி பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முதல் மே மாதம் 5ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை ஹஜ் யாத்திரிகர்களுக்கான பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தப்படும். தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அனைத்து ஹஜ் யாத்திரிகர்களுக்கும் சென்னை சர்வதேச விமான நிலையமே புறப்பாட்டு மையமாக (Embarkation Point) செயல்படுகிறது. இந்த நிலையில், தேவையான உதவிப்பணிகளை மேற்கொள்ள உதவிமையம் (Help Desk) அமைக்கும் ஏற்பாடுகள் செங்கல்பட்டு மாவட்ட சுகாதார அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் சுமார் 6,000 யாத்திரிகர்கள் பயன் பெறுவார்கள்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு உடல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article