
புனே,
மராட்டிய மாநிலம், புனே கோப்டேநகர் சோனவானே அடுக்குமாடி கட்டிடத்தில் 3-வது மாடியில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது மூத்த மகளை நேற்று காலையில் பள்ளியில் விடச்சென்றார். அந்த நேரத்தில் இளைய மகளான பாவிகா (வயது4) என்ற குழந்தை வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டு இருந்தது.
இந்தநிலையில் திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த குழந்தை, திடீரென வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே செல்ல முயன்றது. இதில், சிறுமியின் தலை ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது. குழந்தையின் உடல் பகுதி 3-வது மாடி ஜன்னலில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தது.
இதைப்பார்த்து குடியிருப்புவாசி ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக இதுகுறித்து கட்டிடத்தில் வசித்து வரும் தீயணைப்பு படை வீரர் யோகேஷ் அர்ஜூன் சவானிடம் கூறினார். உடனடியாக அந்த தீயணைப்பு படை வீரர் 3-வது மாடி நோக்கி ஓடினார். அந்த சமயத்தில் குழந்தையின் தாயும் வீடு திரும்பினார். உடனடியாக அவர்கள் வீட்டை திறந்து உள்ளே ஓடிச்சென்றனர்.
இதில் தீயணைப்பு படை வீரர் வீட்டின் உள்புறத்தில் இருந்து ஜன்னலில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த குழந்தையை லாவகமாக மீட்டார். இதனால் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதன் பிறகே பெற்றோர் மற்றும் குடியிருப்புவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவம் புனே கோப்டேநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.