திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. உற்சவத்தின் முதல் நாளான நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தார்.
அதன் பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளுளினார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணிவரை நடைபெற்றது. அதுசமயம் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதேபோல் 2ம் திருநாள் முதல் 6ம் திருநாள் மற்றும் 8ம் திருநாள் வரை தினமும் இரவு 7.15மணி முதல் இரவு 8.15 மணிவரை நம்பெருமாள் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார்.
அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவின் நிறைவு நாளான 9ம் நாள் (28-ந்தேதி) நம்பெருமாள் சந்திரபு~;கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுவதுடன் விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
The post ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.