ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது

1 day ago 2

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 4.30 மணிமுதல் காலை 5.30 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 6.15 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை 19-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

விழாவின் 2-ம் நாளான நாளை (19-ந்தேதி) மாலை கற்பக விருட்ச வாகனத்திலும், 20-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 21-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 22-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 23-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

24-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 25-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. 27-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 28-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

Read Entire Article