ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம்: 12ம் தேதி தேரோட்டம்

18 hours ago 1


திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆதி பிரமோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். அந்த வகையில் பங்குனி தேர் திருவிழாவான ஆதி பிரம்மோற்சவ விழா இன்று(3ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 4 மணிக்கு துவஜாரோஹண மண்டபம் சேர்ந்தார். அதன்பின்னர் கொடி படம் புறப்பட்டு காலை 5.45 மணிக்கு மீன லக்னத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து நம்ெபருமாள் புறப்பட்டு காலை 6.45 மணிக்கு கண்ணாடி அறை சேர்ந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் சேர்கிறார். இரவு 9 மணிக்கு யாகசாலை சேர்கிறார். அதன்பின்னர் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளி யாக சாலையிலிருந்து புறப்பட்டு கண்ணாடி அறை அடைகிறார். 6ம் தேதி ரெங்கவிலாச மண்டபத்தில் கருட சேவை நடக்கிறது. 7ம் தேதி சேஷ, கற்பக விருட்சத்தில் எழுந்தருள்கிறார். 11ம் தேதி தங்க பல்லக்கில் புறப்பாடு, மாலை 3 மணிக்கு நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் (கோரதம்) 12ம் தேதி காலை 8.30 மணிக்கு நடக்கிறது. 13ம் தேதி ஆளும் பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம்: 12ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article