திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும். அதன்படி மூலவர் பெருமாளுக்கு இன்று(8ம் தேதி) ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து பட்டர்கள், சீமான் தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வந்தனர். காவிரி ஆற்றில் 1 தங்கக் குடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரித்தனர்.
அங்கிருந்து காலை 7 மணிக்கு தங்கக் குடத்தை யானை மீது வைத்தும், வெள்ளி குடங்களை தோள்களில் சுமந்தும் அம்மா மண்டபம் சாலை, ராஜகோபுரம் வழியாக கோயிலுக்கு வந்தனர். புனித நீர் கோயிலின் ரங்கவிலாச மண்டபத்தில் வைக்கப்பட்டு, பின்னர் மேள தாளங்கள் முழங்க தாயார் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், உபயநாச்சியார் திருமேனிகளில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் களையப்பட்டு அவை தூய்மை செய்யப்பட்டது. மூலவர் ரங்கநாதரின் திருமேனி சுதையினால் செய்யப்பட்டது. இந்த திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கும் தனித் தைலம் பூசி பாதுகாத்து வருகின்றனர். ரங்கநாதருக்கு திருமஞ்சனம்(அபிஷேகம்) செய்யும் வழக்கம் இல்லை. இதேபோல் பூ, மாலை அணிவிக்கப்படுவதில்லை.
திருமேனி மீது வஸ்திரங்கள், திருவாபரணங்கள் மட்டுமே இருக்கும். உற்சவர் நம்பெருமாளுக்கு தான் அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்படும். மூலவருக்கு இந்தாண்டுக்கான முதல் தைலக்காப்பு இன்று நடைபெற்றது. பெருமாளின் முகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் திரையிட்டு மறைக்கப்பட்டது. நாளை காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது, மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் சமர்ப்பிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்படும். இது பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி இன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசிக்க தடை விதிக்கப்பட்டது. நாளை திருப்பாவாடை சேவையை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம். மேலும் மூலவர் பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றப்படுவதால் அது உலரும் வரை மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும்.
The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்: நாளை திருப்பாவாடை appeared first on Dinakaran.