திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் அருகே 4 பேர் கொண்ட கும்பல், ரவுடியை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரி வெட்டி படுகொலை செய்தது. திருச்சி ஸ்ரீரங்கம், லட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பு (எ) அன்பரசன்(33). ரவுடி கும்பலை சேர்ந்தவர். இவர், நேற்று காலை 8.30 மணியளவில் அங்குள்ள ஜிம்முக்கு சென்றுவிட்டு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். ஸ்ரீரங்கம் கோயில் அருகே, 2 பைக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் அவர், பைக்கை போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று, பக்தர்களின் வாகன பார்க்கிங் பகுதியில் சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதை பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அந்த கும்பல் பைக்கில் தப்பியது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரவுடிகளில் திலீப்பின் கூட்டாளியான அன்பும் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் சேவல் சண்டை தொடர்பாக அன்பு தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒரு வாலிபரை அன்பு அடித்துள்ளார். இதை தொடர்ந்தே அந்த கும்பல் அன்புவை வெட்டி கொலை செய்துள்ளது என தெரிவித்தனர்
The post ஸ்ரீரங்கம் கோயில் அருகே ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: 4 பேர் கும்பல் வெறிச்செயல் appeared first on Dinakaran.