ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு தனியார் அட்டை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், அட்டைகள் முழுவதுமாக எரிந்து சேதமானது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் டிஜிஐ பேக்கிங் எனும் தனியார் நிறுவன அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தியாகும் பல்வேறு விதமான அட்டைகள், ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்தொழிறசாலையில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், இந்த தனியார் அட்டை தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென அதிகளவு கரும்புகை எழுந்தது. சில மணி நேரத்தில் தொழிற்சாலை முழுவதிலும் தீ பரவி, கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் மின் இணைப்பை துண்டித்து, தொழிற்சாலை முழுவதிலும் பரவியிருந்த தீயை சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் முற்றிலும் அணைத்தனர்.
இவ்விபத்தில், அத்தொழிற்சாலையில் பல லட்சம் மதிப்பிலான உற்பத்தி செய்து வைக்கப்பட்டு இருந்த புதிய அட்டைகள் மற்றும் அதன் தயாரிப்பு இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டன. இப்புகாரின்பேரில் சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்டிருந்த மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரியவந்தது. இருப்பினும், தீ விபத்துக்கான பல்வேறு காரணங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
The post ஸ்ரீபெரும்புதூர் அருகே அட்டை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சேதம் appeared first on Dinakaran.