
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத ஸ்ரீ ராமானுஜர் அவதார உற்சவம் கடந்த ஏப்ரல் 26-ந்தேதி தொடங்கியது. கடந்த 10 நாட்களாக பல்வேறு வாகனங்களில் ராமானுஜர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து அவதார உற்சவத்தின் கடைசி நாளில் கந்தபொடி வசந்தம் நடைபெற்றது. திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட 108 திவ்ய தேசமாக கருதப்படும் பெருமாள் கோவில்களில் இருந்து மாலை, பட்டு வஸ்திரங்கள், பரிவட்டம் கொண்டுவரப்பட்டு ராமானுஜருக்கு சாற்றப்பட்டன.
இதை தொடர்ந்து கந்தபொடி வசந்தம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக சித்திரை வெயிலில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்த ஸ்ரீ ராமானுஜரை குளிர்விக்கும் விதமாக அவர் மீது கந்தபொடி எனப்படும் மஞ்சள் பொடி தூவப்பட்டது. பக்தர்கள் கந்தபொடியை ஒருவர் மீது ஒருவர் துாவி கொண்டாடி மகிழ்ந்தனர்.