ஸ்ரீசக்ர நாயகியே எழுந்தருள்க!

4 hours ago 3

சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதா

இப்போது நாம் பண்டாசுரனுடைய யுத்தத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த யுத்தத்தில் சதுர் அங்கங்கள் என்று சொல்லக் கூடிய அந்த படையைத்தான் நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சைன்னியங்களில் இரண்டு அங்கங்களை பார்த்திருக்கிறோம்.

‘‘சம்பத்கரீ சமாரூட சிந்துர வ்ரஜ ஸேவிதா’’ என்பது யானைப்படை என்று சொல்லக் கூடிய கஜ சைன்யம். அஸ்வாரூடா திஷ்டிதாஸ்வ கோடிகோடி ப்ராவ்ருதா… என்பது குதிரைப் படை என்று சொல்லக் கூடிய அஸ்வ சைன்யம். சதுர் அங்கங்களில் இந்த யானைப்படை, குதிரைப் படைக்கு அடுத்ததாக இருப்பது, அதாவது கஜ சைன்யம், அஸ்வ சைன்யத்திற்கு அடுத்து இருப்பது ரத சைன்யம். தேர்ப் படை. இந்த ரத சைன்யம் என்பது அந்த சைன்யத்தில் இருக்கக்கூடிய ரதங்கள். எத்தனை எத்தனை ரதங்கள் இருக்கிறது. ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு ரதம் இருக்கும். ஆனால், அதையெல்லாம் தாண்டி, ஒரு சைன்யத்தில் முக்கியமான ரதம் என்பது அந்த சைன்யத்தில் இருக்கக் கூடிய மகாராஜா அல்லது மகாராணியினுடைய ரதம். அதற்குப் பிறகு மந்திரியினுடைய ரதம் இருக்கும். இதற்குப் பிறகு சேனாதிபதியினுடைய ரதம். இந்த மூன்று ரதங்களும் ஒரு சைன்யத்தில் மிகமிக முக்கியமானது. அதற்கு அடுத்தபடியாக இருக்கக் கூடிய மற்ற வீரர்களுக்கு அவரவர் நிலைக்கு ஏற்றாற்போல் ரதம் இருக்கும்.

இந்த ரதத்திலே முதன்மையான ரதம் யாருடையது எனில், அம்பிகையினுடையது ஆகும். சாட்சாத் லலிதா திரிபுரசுந்தரியினுடையது. ஏனெனில், அவள்தான் இந்த மொத்த சைன்னியத்திற்கும் தலைவி. அம்பாளினுடைய ரதம் எப்படி இருக்கிறதெனில், சக்ரராஜ ரதாரூட… சக்ர ராஜ ரதமாக இருக்கிறது. அதென்ன சக்ரராஜ ரதம் என்றால், ரதத்திற்கு சக்ரங்கள் இருக்கும். ஆனால், ஒரு ரதத்திற்கே ஏன் சக்ர ராஜம் என்று பெயர் என்றால், அம்பிகையினுடைய ஸ்ரீசக்ரம் இருக்கிறதல்லவா… அந்த ஸ்ரீ சக்ரத்திற்கு சக்ர ராஜம் என்று பெயர். ஏன், சக்ர ராஜம் என்று பெயரெனில், அம்பிகையினுடைய சக்ரமானது எல்லா சக்ரத்திற்கும் தலைமையானது . அம்பாள் எப்படி எல்லா தேவதைகளுக்கும் தலைமையானவளாக இருக்கிறாளோ, எல்லா தேவதைகளுக்கும் அம்பாள் எப்படி தலைமைப் பொறுப்பில் இருக்கிறாளோ அதுபோல ஒவ்வொரு தேவதைக்கும் சக்ரம் உண்டு. அந்த சக்ரங்களுக்கெல்லாம் தலைமையான சக்ரம் ஸ்ரீசக்ரம்.

அதாவது அதைத்தான் யந்த்ரம் என்று சொல்லுவோம். கோயில்களில் அந்தந்த யந்த்ரம் பிரதிஷ்டை செய்துதான் அந்த மூர்த்தியை பிரதிஷ்டை செய்வார்கள். அந்த யந்த்ரத்திற்கெல்லாம் ராஜாவாக ஒரு யந்த்ரம் இருக்கிறதென்றால், ஸ்ரீ யந்த்ரம் என்று சொல்லக் கூடிய ஸ்ரீசக்ரம். அம்பாளினுடைய ஸ்ரீசக்ரம்தான் எல்லா யந்த்ரங்களுக்கும், சக்ரத்திற்கும் ராஜாவாக இருப்பதால், அந்த ஸ்ரீசக்ரத்திற்கு யந்த்ர ராஜம் என்றும் சக்ரராஜமென்றும் பெயர். அப்படியெனில், சக்ர ராஜம் என்று சொன்னாலே அது ஸ்ரீசக்ரத்தைத்தான் குறிக்கும்.

இப்போது அம்பாளினுடைய ரதம் எப்படியிருக்கிறதெனில், அந்த ஸ்ரீசக்ரமே இங்கு ரதமாக இருக்கிறது. இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.

அம்பாளை குறிக்கக்கூடிய ஒரு குறியீடு, symbol அல்லது design தான் ஸ்ரீசக்ரம். அம்பாளினுடைய யந்த்ர ரூபம். இதுவே அம்பாளினுடைய அருவுருவம். உருவமும் கிடையாது. அருவமும் கிடையாது. இந்த ஸ்ரீசக்ரம் எப்படியிருக்கிறதெனில், அவள் இருக்கக்கூடிய சிந்தாமணி கிரகத்தில் மகாமேரு பீடமிருக்கிறதல்லவா… அதுவே ஸ்ரீசக்ரமாக இருக்கிறது. அதற்கடுத்து அவள் இருக்கக்கூடிய அந்த மொத்த ஸ்ரீ நகரம் இருக்கிறதல்லவா… அந்த ஸ்ரீபுரம் எப்படியிருக்கிறதெனில் அதுவும் ஸ்ரீசக்ர ரூபத்திலிருக்கிறது. அதற்கடுத்து அவள் ஏறக்கூடிய ரதம் இருக்கிறதல்லவா… அந்த ரதமும் ஸ்ரீசக்ர ரூபத்திலேதான் இருக்கிறது. அவள் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்கள் இருக்கிறதல்லவா… அவள் காதில் தாடங்கம் அணிந்திருக்கிறாள். அந்த தாடங்கத்திலும் ஸ்ரீசக்ரம் வரையப்பட்டிருக்கிறது. திருமார்பில் அணிந்திருக்கக்கூடிய பதக்கம் இருக்கிறது. அதிலும் ஸ்ரீசக்ரம்தான் போடப்பட்டிருக்கிறது. அப்போது அம்பாள் சம்மந்தப்பட்ட எல்லாமே ஸ்ரீசக்ரம்.

அவளுடைய ஆபரணம் ஸ்ரீசக்ரம். ரதம் ஸ்ரீசக்ரம். அவள் வசிக்கக்கூடிய இருப்பிடம் ஸ்ரீசக்ரம். அவள் அமர்ந்திருக்கக் கூடிய பீடம் ஸ்ரீசக்ரம். எல்லாமே ஸ்ரீசக்ரம்தான். எனவே, ஸ்ரீசக்ரம் என்பது சாட்சாத் அம்பிகையினுடைய சொரூபம். அதனால், எதெல்லாம் அம்பிகையோடு தொடர்புள்ளதால் அதெல்லாமுமே ஸ்ரீசக்ரம்தான். இது எப்படி என்பதற்கு தற்கால முறையில் ஒரு உதாரணம் பார்க்கலாம்.

பெரிய ஒரு நிறுவனம் இருக்கிறதென்று கொள்வோம். அந்த நிறுவனமானது தங்களுக்கென்று ஒரு logo ஒன்றை உருவாக்குகிறார்கள். அந்த logo வானது அந்த கம்பெனியினுடைய logo என்று எடுத்துக்கொண்டால், அந்த லோகோவை அவர்கள் எல்லா இடத்திலும் உபயோகப்படுத்துவார்கள். இப்படியாக ஒரு கம்பெனியினுடைய சகல இடங்களிலும் அந்த லோகோவானது எல்லா இடங்களிலும் இடம்பெற்றபடி இருக்கும். அந்த ஊழியர்களின் உடை, ID CARD, முதல்… அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு இடத்திலும் அது துண்டுக் காகிதமாக இருந்தாலும் சரிதான் அந்த லோகோவை இடம் பெறச் செய்வார்கள்.

அதேமாதிரி அம்பாளினுடைய லோகோ என்பது ஸ்ரீசக்ரம். அதனால் எங்கெல்லாம் அம்பாள் சம்மந்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஸ்ரீசக்ரம் இருக்கும். அப்படி இருக்கக்கூடிய ஸ்ரீசக்ராகாரமான ரதத்தில் அம்பாள் ஆரோகணித்திருக்கிறாள். அம்பாள் அந்த ரதத்தில் ஏறி பண்டாசூரனோடு போர் புரியப்போகிறாள்.

இப்போது இந்த சக்ரராஜ ரதத்தில் அம்பாள் இருக்கிறாள். இந்த நாமம் என்ன சொல்கிறதெனில், சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதா… என்று சொல்கிறது. அம்பாள் அந்த ரதத்தில் ஏறும்போது என்ன ஆகிறதெனில், அம்பாளினுடைய ஆயுதங்கள் இருக்கிறதல்லவா…

கரும்பு வில், பஞ்ச பாணம், பாசம் அங்குசம்…. மனோ ரூபேஷு கோதண்டா, பஞ்ச தன்மாத்ர ஸாயகா, க்ரோதாகாராங் குசோஜ்வலா, ராக ஸ்வரூப பாசாட்யா, இந்த நான்கும் அம்பிகையினுடைய முக்கியமான ஆயுதங்கள். இதுமட்டும்தான் அம்பாளினுடைய ஆயுதங்களா எனில், இல்லை. அம்பாளுக்கு எண்ணற்ற ஆயுதங்கள் உண்டு. இந்த நாமத்தையே பாருங்கள். ஸர்வாயுத பரிஷ்க்ருதா… ஒரு போருக்கு போகக் கூடிய தலைவன் அல்லது தலைவி. ஒரு மகாராஜாவோ அல்லது ஒரு மகாராணியோ எல்லாவித ஆயுதங்களோடும் அந்த போருக்கு போவார்கள். அப்படி மஹாராணியாக இருக்கக் கூடிய மகா திரிபுர சுந்தரியானவள் சர்வாயுதங்களோடு போருக்குப் போகிறாள். பண்டாசுர யுத்தத்திற்குப் போகிறாள். அதனால், அவளுக்கு ஸர்வாயுத பரிஷ்க்ருதா என்று பெயர். எத்தனையோ விதமான ஆயுதங்களைக் கொண்டவள்.

எப்படி இருக்கிறாள் எனில், சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதா… ஸ்ரீசக்ர ரூபமாக இருக்கக்கூடிய ரதத்தில் ஏறி சர்வாயுதங்களையும் கொண்டு, பண்டாசுர யுத்தத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறாள். இது இந்த நாமத்தினுடைய வெளிப் படையான அர்த்தம். வாருங்கள். இந்த நாமா உள்முகமாக நமக்கு என்ன உணர்த்துகிறது என்று பார்ப்போம்.
(சுழலும்)

The post ஸ்ரீசக்ர நாயகியே எழுந்தருள்க! appeared first on Dinakaran.

Read Entire Article