நினைப்பே நிஜமாகிறது!
வித்யாவினயஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா ஸமதர் சின (5:18)
‘‘கல்வியறிவு மிக்க பெரும் பண்டிதரிடம் எப்படி பழகுவானோ அப்படியே ஒரு பசுவிடமும், ஒரு யானையிடமும், ஒரு நாயிடமும், ஏன், ஒரு சண்டாளனிடம்கூட ஞானி பழகுவான்.’’
ஞானமடைந்தவன் பக்குவ மனம் கொண்டவனாகத்தான் இருப்பான். இவனிடம் பரிபூரண சமத்துவ நோக்கு இருக்கும். ஜீவன் என்றுதான் பார்ப்பானே தவிர, அது எந்த உடலைக் கொண்டிருக்கிறது, எந்த இனவகையைச் சேர்ந்தது என்ற பாகுபாடு அறியாதவனாக இருப்பான்.
இத்தகைய ஞானியாகத் திகழ்ந்தவர்தான் ரமண மகரிஷி. அணில், குரங்கு, மான், பசு, காளை, தன் சீடர்கள் ஏன், திருடர்களிடம் கூட அவர் அன்பைப் பொழிந்தார். துர்நோக்கம் கொண்டவர்களும் தம் செயலுக்காக வெட்கி மனம் திருந்தியிருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு மனம் மாறுவார்கள் என்ற எதிர்பார்த்தலில் ரமணர் அவர்களுடன் பழகவில்லை என்பதுதான் உண்மை. அது அவருடைய சுபாவம், ஒரு ஞானியின் சுபாவம். அன்புடன் பழகுவதைத் தவிர வேறு எந்த உணர்வும் கொள்ளத் தெரியாதவர், அவர்.
இவ்வாறு ஞானியர் எந்தப் பின்விளைவிலும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சமத்துவத்தைத் தாமறியாமலேயே பயின்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த உலகம் முழுவதுமே சமத்துவபுரம்தான். அதனாலேயே அவர்கள் சச்சிதானந்த பரமாத்மாவிலேயே நிலை கொண்டிருக்கின்றனர்.
‘நாம் எதுவாக நினைக்கிறோமோ, அதுவாகவே ஆகிவிடுகிறோம்’ என்று சொல்வதுண்டு. நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவனுடைய பார்வையில் செல்வம் மட்டும்தான் படும்; அவன் காதுகள் செல்வத் தகவல்களைத்தான் கேட்கும். அவன் செல்வ சிந்தனை வயப்பட்டவனாகவே இருப்பான். இதைத்தான், ‘அவன் காசு என்ற உலோகமாகவே மாறிவிட்டான்’ என்பார்கள். பதவி விரும்பும் ஒருவன் பார்ப்பதெல்லாம் நாற்காலியாகவே இருக்கும். இவனும் ஒரு நாற்காலியாகவே ஆகிவிடுகிறான்! அதாவது ஒருவன் எதை விரும்பித் தேடுகிறானோ, அவனுடைய முகம், கண்கள், கைகள், கால்கள் எல்லாவற்றிலும் அதுவே எழுதப்பட்டிருக்கும்! அதேபோல ஞானியரும் தாம் பரமாத்மாவில் ஐக்கியமாக வேண்டும் என்பதற்காகத் தங்களையே அவ்வாறு பாவித்துக் கொள்கிறார்கள்.
பரமாத்மாவின் குணாதிசயமும் அதுதான். சமநிலையில் நிற்கும் தராசுக்கோல் போல, உயிருள்ள, உயிரற்ற எல்லா பொருட்களிலும் அது சமத்துவம் காணும். ஆகவே இறைவனை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சரிநிகர் நிலையை அடைய வேண்டும். தான் வேறு, இறைவன் வேறு என்ற பாகுபாடு அந்தப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றாது. தானே அவன் என்ற கோட்பாடு உள்ளத்தில் ஆழப் பதியுமானால், அங்கே கோபம், லோபம், காமம், வெறுப்பு, பொறாமை போன்றவை தோன்றவே முடியாது. ஏனென்றால் இந்த மனோபாவத்தில்தான், கருணை, அன்பு, மன்னிப்பு, தானம், ஈகை எல்லாம் மலர்ந்து மணம் பரப்புகின்றன.
இத்தகையவனால்தான் இறைவனை நோக்கி முன்னேற முடிகிறது. கோபப்படுபவனைப் பாருங்கள், அவனுடைய உடலே ஆடும்! முகம் கடுமையாகி, சிவக்கும்; கைகள் உயர்ந்து இயல்பைவிட வேகமாகத் துடிக்கும். ஏன்? உள்ளுக்குள் சமநிலை தடுமாறுவதால்தான். தட்டிவிடப்பட்ட தராசுத் தட்டுகள் தாறுமாறாகத்தானே ஊஞ்சலாடும்? அது, அதர்மத்தின் அடையாளம். கோபம் என்றில்லை, எந்த உணர்வாலும் சமநிலை பாதிக்கப்படுகிறதா, அதெல்லாம் அதர்மமானவைதான்.
இஹைவ தைர்ஜித ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மன
நிர்தோஷம் ஹி ஸமம்ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணிதேஸ்திதா (5:19)
‘‘மனதை சமநிலையில் வைத்திருக்க முடிந்தவர்களால், அதை உறுதிப்படுத்துபவர்களால், இம்மையிலேயே இயற்கையையும் வெல்ல முடிகிறது. பிரம்மம் நடுநிலையானது, அது எந்த அழுக்கும் கொள்ளாதது. ஆகையால் சமநிலையாளர்களால் பிரம்மத்தில் நிலைத்திருக்க முடிகிறது.’’துரதிருஷ்டவசமாக நம் மனத்தராசு ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்துதான் இருக்கிறது. சாய்ந்திருக்கும் பக்கம் அதாவது சார்ந்திருக்கும் பக்கம் சரியானதா என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம். அந்தந்த நேரத்து அழுத்தத்துக்கு ஏற்ப நம் சாய்தல் அமைகிறது. தலையாட்டி பொம்மைகூட அதன் தலையைப் பிடித்து இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ அசைத்தால்தான் அதுவும் சாயும். இல்லாவிட்டால் சற்றே பலமான காற்றால்கூட அதை சாய்க்க முடியாது. ஏனென்றால் அதன் அடியில் உள்ள நடுநிலை கனம் அத்தகையது. அப்படி சமநிலையில் உறுதியாக இருப்பவன்தான் ஞானி.
சாதாரணன் பார்வைக்கு, ஒரு ஞானி சமநிலையற்றவன் போலத் தோற்றமளிக்கலாம். ஞானியின் தீர்க்கமான பார்வைக்கு அவன் தன் மனப்போக்குபோல அர்த்தம் கற்பித்துக் கொள்ளலாம். ஆனால் ஞானிக்குள் சமநிலை இருக்கிறது. அதை அவனுடைய புறத்தோற்றம் காட்டாது; சந்தேகப்படுபவன் அந்த ஞானியை நெருங்கினால் மட்டுமே அறியக்கூடும். மஹாவிஷ்ணு கையில் சக்ராயுதம் ஏந்தியிருப்பதால் அவரை வன்முறையாளர் என்று கட்டம் கட்டிவிட முடியுமா? யானை கஜேந்திரனைக் காப்பாற்ற முதலையை அந்த சக்ராயுதத்தால் வதைத்ததைக் கொடுங்கோன்மை என்று வர்ணிக்க முடியுமா? அந்தச் செயலால் தர்மம் தழைத்தது. அதாவது அவர் சமநிலை மனம் கொண்டவராகத் திகழ்ந்தார் என்பதுதான் உண்மை.
ஒரு பூந்தோட்டத்தை நோக்கி நடக்கிறோம். வெகு தொலைவிலேயே அந்தத் தோட்டத்திலிருந்து மென் காற்று தவழ்ந்து வந்து நம்மை அடைகிறது. கூடவே தோட்டத்து மலர்களின் மணமும். தென்றலோ, மணமோ நம் கண்களுக்குத் தெரியவில்லை; உடலும், நாசியும் அவற்றை ஸ்பரிசிக்கிறது, நுகர்கிறது. ஆக, நாம் சரியான கோணத்தில்தான் மலர்த் தோட்டத்தை அணுகுகிறோம் என்பதை அனுமானித்துக் கொள்ள முடிகிறது. அதேபோல நமக்குள் தென்றல் மற்றும் மணம் போன்ற சமநிலை பாவனை உருவாகுமானால், நாம் இறைவனை நோக்கிச் சரியான பாதையில்தான் நடை பயில்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இதைத்தான் கிருஷ்ணன் சொல்கிறார்: ‘‘ஒருவன் சமத்துவத்தை அடைந்துவிட்டால் அவனாலேயே இறைவனுடன் ஒன்றாக முடிகிறது; அதாவது தத்ரூபமடைய முடிகிறது. அவ்வாறு அவன் இறைவனுடன் ஒன்றி விடுவானேயாகில், யானை, குதிரை, பசு, சண்டாளன் எல்லாவற்றிலும் அவன் இறைவனையே காண்கிறான்.’’ஆதிசங்கரரின் அனுபவமும் இதைப் போன்றதுதானே! காசியில், கங்கை நதியை நோக்கி, ஒரு குறுகிய சந்து வழியாக அவர் போய்க் கொண்டிருந்தபோது, அப்போதைய காலகட்டத்தில் பிறரால் ஒதுக்கப்பட்ட சண்டாளன் ஒருவன் எதிர்ப்பட்டான். அந்நாளைய ஆசாரப்படி அவன், ஆசார்யனுக்கு பவ்யமாக ஒதுங்கி வழிவிட வேண்டும். ஆனால் அவன் வழி மறித்தே நின்றான்.
‘வழி விடு, விலகு’ என்றார்கள் சங்கரருடன் வந்த அவருடைய சீடர்கள். ‘யாருக்கு யார் வழி விடுவது? இந்த உடம்பு வழிவிட்டால் போதுமா? ஆன்மாவும் வழி விட வேண்டுமா?’ என்று அவன் கேட்டபோது, தன் நிலை உணர்ந்தார் சங்கரர். ஆன்ம சுத்தம் இல்லாதவன் எத்தனை முறைதான் கங்கையில் குளித்தாலும் அவனால் புண்ணியம் பெற முடியுமா என்றும் சிந்தித்தார். நம் நோக்கிலேயே பிறரையும் கருதுவது, எடை போடுவது எல்லாம் அவருடைய உண்மைத் தன்மையை நம்மால் உணர முடியாமல் செய்து விடுகின்றன.
சாலையில் போய்க் கொண்டிருக்கும் ஒருவன், எதிரே தன் நண்பனைப் பார்த்தான். நண்பன் நட்பாகச் சிரிக்கிறான். உடனே இவனுக்கு, ‘இவன் ஏன் சிரிக்கிறான்? ஏதாவது பணம் கடன் கேட்பானோ?’ என்ற எண்ணம் ஓடியது. இவன் நினைத்ததைப் போலவே, நண்பன், நூறு ரூபாய் கடன் கேட்டான். விரைவில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் உத்தரவாதம் அளித்தான். இவன், தான் நினைத்ததே நடந்தது கண்டு திகைத்தான். தன்னிடமிருந்த பணத்திலிருந்து நூறு ரூபாய் கொடுத்தான். கொடுக்கும்போதே, இவன் எங்கே இதைத் திருப்பித்தரப் போகிறான் என்று யோசித்துக் கொண்டான். அப்படியே பணம் போனாலும் பரவாயில்லை; நட்பு நிலைத்திருந்தால் சரி என்று தன்னை சமாதானமும் படுத்திக் கொண்டான்.
கடன் வாங்கியவனோ சொன்ன காலகெடுவுக்குள் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டான்! இவனுக்குத் திகைப்பு. கொடுக்க மாட்டான் என்று நினைத்திருந்தோமே…. ஆனால் நாலைந்து நாட்கள் கழித்து அதே நண்பன், இவனிடம் வந்து ஐநூறு ரூபாய் பணம் கடனாகக் கேட்டான். இவன் திடுக்கிட்டான். ஆனாலும், நட்பின் காரணமாகக் கொடுத்தான். இம்முறையும், அவன் தான் சொன்ன கெடுவுக்குள் ஐநூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்து விட்டான்!
இவன் குழப்பமடைந்தான். இப்போதும் இவனுக்கு ஏமாற்றம், ஆமாம், திரும்ப வராது என்று நினைத்தப் பணமல்லவா அது!ஆனால் மேலும் சில நாட்கள் கழித்து அதே நண்பன், இவனைச் சந்தித்து ஆயிரம் ரூபாய் கேட்டான். இப்போது இவன் சுதாரித்துக் கொண்டான். ‘சாரி, என்னிடம் இல்லை’ என்று கூறிவிட்டான். இவன் பளிச்சென்று இவ்வாறு மறுத்ததைக் கேட்ட நண்பன் திகைத்தான். ‘‘இதற்கு முன் இருமுறை கொடுத்தாயே, கொஞ்சமும் தயங்காமல் கொடுத்தாயே, இப்போது சட்டென மறுக்கிறாயே, ஏன்?” என்று நண்பன் கேட்டான்.
‘‘உன்னால் இரண்டு முறை நான் ஏமாந்து விட்டேன்,” என்று பதிலளித்தான் இவன். ‘‘முதல் முறை நீ திருப்பித்தர மாட்டாய் என்று நினைத்தேன், தந்து விட்டாய். இரண்டாம் முறையும் அப்படியே நினைத்தேன். ஆனால் அப்போதும் நீ என்னை ஏமாற்றி விட்டாய். இப்போது மூன்றாம் முறை கேட்கிறாய், நான் ஏமாறத் தயாராக இல்லை, தர மாட்டேன்,” என்றான்.
நண்பன் வியந்தான்.
என்ன ஒரு பதில் இது! திரும்பக் கிடைக்காது என்று எதிர்பார்த்து ஆனால் கிடைத்து விட்ட அனுபவம் எப்படி ஏமாற்றமாகும்? அதாவது கடன் தொகையின் மதிப்பு உயர உயர, திருப்புதல் என்பது இருக்காது என்று கருதுகிறானோ? சிறு தொகையாக இருந்ததால் திரும்பாவிட்டாலும் பரவாயில்லை என்ற உதார குணம், பெரும் தொகையென்றால் வருவதில்லை! அதோடு திரும்பக் கிடைக்காது என்ற அவநம்பிக்கையும், திரும்ப வரவேண்டுமே என்ற ஏக்கத்தோடே ஏற்பட்டதுதான்!
நெளிவுகளுடன் இருக்கும் ஒரு கண்ணாடி எதிர்ப் பொருளை எப்படி பிம்பிக்கும்? கோணல் மாணலாகத்தானே! அதன் சர்ஃபேஸ் சமமாக, எந்த வளைவும் இல்லாதிருந்தால், பிம்பம் தெளிவாக இருக்கும்தானே? அதோடு அந்தக் கண்ணாடி, பொருட்களிடையே பாரபட்சம் பார்க்குமா? தன் முன்னே வரும் எந்தப் பொருளையும், உள்ளது உள்ளபடியே பிம்பிக்கும்தானே? மனசும் அப்படித்தான். இந்தத் தெளிவான மனசுக்கு, கூடுதல், குறைதல், மாறுதல் என்று எந்த பேதமும் இல்லை. அதனாலேயே அது குற்றமற்றது, கேடில்லாதது. அவ்வாறு விளங்குவதாலேயே அதனால் எளிதாக இறைவனை நோக்கிச் செல்ல முடிகிறது. இப்படிப்பட்ட மனம் படைத்தவர்கள், பிரம்ம ஞானிகள் எனப்படுகிறார்கள்.
ஞானிகளின் இலக்கணம், மற்றவரிடம் உள்ள நல்லதை மட்டுமே காண்பது. அவ்வாறு சுபமான விஷயங்களைக் காணும்போதுதான், இறைவனின் நினைவும் வரும். பிறரிடம் உள்ள கேட்டை கண்டால், நம் உள்ளத்துக்குள் கடவுள் வரமாட்டார், பிசாசுதான் வரும் – கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வராது என்று நினைத்துக் கொண்டவனைப்போல!
(கீதை இசைக்கும்)
தொகுப்பு: பிரபு சங்கர்
The post ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 90 (பகவத்கீதை உரை) appeared first on Dinakaran.