ஷாங்காய்: சீனாவில் நடந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் யானிக் சின்னர் (இத்தாலி) சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச்சுடன் (37 வயது, 4வது ரேங்க்) நேற்று மோதிய சின்னர் (23 வயது), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (7-4) என கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
அதே வேகத்துடன் 2வது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த அவர் 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி 37 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சின்னர் வென்ற 4வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடர் இது. நடப்பு சீசனில் மட்டும் அவர் 7 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2016 சீசனில் ஆண்டி மர்ரே 9 பட்டங்களை வென்றதே அதிகபட்சமாகும். ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் மும்மூர்த்திகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோரில் பெடரர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், நடால் அடுத்த மாதம் நடக்க உள்ள டேவிஸ் கோப்பை போட்டியுடன் விடைபெற உள்ளார். இந்த நிலையில், ஜோகோவிச்சும் 2025 சீசனுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் யானிக் சின்னர் சாம்பியன் appeared first on Dinakaran.