வௌிநாடுகளுக்கு எம்பிக்கள் குழு பயண விவகாரம்; பிலாவல் பூட்டோவை விட சசிதரூர் சிறந்தவர் ; பாகிஸ்தான் நிருபரின் பதிவால் அரசியல் பரபரப்பு

2 hours ago 2

புதுடெல்லி: வௌிநாடுகளுக்கு எம்பிக்கள் குழு பயண விவகாரத்தில் பிலாவல் பூட்டோவை விட சிறந்தவர் சசி தரூர் என்று பாகிஸ்தான் நிருபர் வெளியிட்ட பதிவால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்குவதற்காக பல்வேறு நாடுகளுக்கும் அனைத்துக் கட்சி குழுவை ஒன்றிய அரசு அனுப்புகிறது. அந்த குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் உள்ளிட்ட எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். அதேநேரம் இந்திய ராணுவத்திடம் பாடம் பெற்ற பாகிஸ்தான், தனது நாட்டின் எம்பிக்கள் குழுவை உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது.

அந்த குழுவின் நோக்கம் உகலளாவிய அமைதிப் பணி என்று கூறியுள்ளது. இந்த குழுவை பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ வழிநடத்தி செல்லவுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் மொயீத் பிர்சாடா என்பவர் வெளியிட்ட வீடியோ பதிவில், பிலாவல் பூட்டோவை கிண்டல் செய்துள்ளார். அந்த வீடியோவில், ‘இந்திய எம்பியுமான சசி தரூர் சுயமாக உருவான மனிதர் ஆவார். ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு குறிப்பிடத்தக்க பதவிகளை சசிதரூர் வகித்துள்ளார். ஜெனீவாவில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையராக தனது பணியைத் தொடங்கி, கடைசியாக தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தகவல்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் பதவி வரை பணியாற்றி உள்ளார். ஐ.நா.வில் அவரது அனுபவம், சர்வதேச உறவுகள் மற்றும் பலதரப்பு ராஜதந்திரம் பற்றிய ஆழமான புரிதல் அவருக்கு உள்ளது.

அதேநேரம் பாகிஸ்தான் அரசால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பிலாவல் பூட்டோ, சசிதரூருக்கு இணையாக சிறிதும் போராடவில்லை. முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் மகனான பிலாவல் பூட்டோ, கடந்த 2007ம் ஆண்டு தனது தாயார் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசியலில் நுழைந்தார். தற்போது அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார். மேலும் பிலாவல் பூட்டோவுக்கு பதிலாக சசி தரூர் பாகிஸ்தானில் இருந்திருந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். பிலாவலுக்குப் பதிலாக சசி தரூர் போன்ற படித்த, தகுதியான நபர் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக இருந்தால், அவர் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை சிறப்பாக விளக்கியிருப்பார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளரான இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த ஒப்பீட்டுக்கு சசி தரூர் வெளியிட்ட பதிவில், ‘உங்களது நட்பு பாராட்டத்தக்கது; ஆனால் நாட்டின் தேச நலன்களுக்கு எதிராக எதையும் ஆதரிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும், சசி தரூரின் ஆளுமையையும், ஆங்கிலப் புலமையையும் பாராட்டி வருகின்றனர்.

The post வௌிநாடுகளுக்கு எம்பிக்கள் குழு பயண விவகாரம்; பிலாவல் பூட்டோவை விட சசிதரூர் சிறந்தவர் ; பாகிஸ்தான் நிருபரின் பதிவால் அரசியல் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article