
புதுடெல்லி,
சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஏலம் விட்டது. இந்த ஏலத்திற்கான தொகையை தவனைகளாக வழங்குவதற்கான வாய்ப்பை தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு வழங்கியது. ஆனால் இதற்கிடையில் கொரோனா பெரும் தொற்று ஏற்பட்டதால் அந்த ஏலத்திற்கான தொகையை நிறுவனங்களால் செலுத்த முடியவில்லை.
அப்போது தான் மத்திய அரசு அவர்களுக்கு ஏலத்தொகையை செலுத்த கால அவகாசம் வழங்கியது. அப்படி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அவர்களால் ஏலத்திற்கான நிலுவையில் உள்ள தொகையை செலுத்த முடியவில்லை என்றால் நிலுவையில் இருக்கக்கூடிய அந்த கடன் தொகையை பங்குகளாக மாற்றிக்கொள்ளலாம் எனகிற வாய்ப்பையும் வழங்கியது. இந்த அடிப்படையில் தான் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக இருக்கக்கூடிய வோடபோன் நிறுவனம் மத்திய அரசுக்கு சுமார் ரூ. 36,950 கோடி நிலுவைத்தொகையாக வைத்திருக்கிறது.
இவை அனைத்தும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஏலம் எடுத்ததற்கான தொகையாகும். இந்த குறிப்பிட்ட காலக்கெடு முடிவடைந்த பின்னரும் அந்த ஏலத்தொகையை வோடபோன் நிறுவனத்தால் செலுத்த முடியாத காரணத்தால் அவற்றை பங்குகளாக மாற்றிக்கொடுக்குமாறு மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் நிலுவையில் இருக்கக்கூடிய தொகையை பங்குகளாக மத்திய அரசிடம் வழங்குவதற்கு வோடபோன் நிறுவனம் முன்வந்திருக்கிறது. தற்போது செலுத்த வேண்டிய நிலுவைத்தொலை ரூ. 35,950 கோடி ஆகும்.
ஒரு பங்கின் மதிப்பு ரூ. 10 என்கிற விகிதத்தில் மொத்தம் 3,695 கோடி பங்குகளை வெளியிட வோடபோன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை வோடபோன் நிறுவனம் பங்குகள் பரிவர்த்தனை வாரியமான செபிக்கு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செபியிடம் உரிய அனுமதி பெற்று 30 நாட்களுக்கும் இந்த பங்குகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை வோடபோன் நிறுவனத்தின் 22.6 சதவீத பங்குகள் மத்திய அரசிடம் உள்ளது.
தற்போது நிலுவையில் உள்ள இந்த கூடுதல் பங்குகளை வெளியிட்ட பின்னர் கிட்டத்தட்ட 49 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் இருக்கும் என கூறப்படுகிறது. என்னதான் மத்திய அரசிடம் அதிக அளவு பங்குகள் இருந்தாலும் கட்டுப்பாடு முழுவதும் வோடபோன் நிறுவனத்தின் வசமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசிடம் 55 சதவீதத்திற்கும் மேலாக பங்குகள் இருந்தால் மட்டுமே ஒட்டுமொத்த கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருக்கும். இந்த நிலையில் பங்குகள் அதிகரித்தாலும் கட்டுப்பாடுகள் வோடபோன் நிறுவத்திடமே இருக்கும் என கூறப்படுகிறது.