திருச்சி, பிப்.10: சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் ராஜா பாபு தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் பெரும்பாலான மானாவாரி சாகுபடியில், விவசாயிகள் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இருப்பினும் பயறுவகை பயிர்களின் சாகுபடி பரப்பளவு போதிய அளவாக இல்லை. ஆனால் பயறு வகைகளின் தேவை மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், விவசாயிகள் குறைவான சாகுபடி பரப்பில் அதிக மகசூல் எடுப்பதற்கு தேவையான மேம்பட்ட சரியான தொழில்நுட்பங்களை கையாள்வது அவசியமாகிறது. இதற்காக தமிழ்நாடு வேளாண்்மை பல்கலைக்கழகம் ‘பயறு ஒண்டர்’ என்ற நுண்ணுாட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது பயறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த ஒரு பூஸ்டராகும். பூக்கும் பருவத்தில் பயறு வகைகளில், பயறு ஒண்டர் தெளிப்பதால் பூக்கள் உதிர்வது குறையும், பயறுவகை பயிர்களின் விளைச்சல் 20% வரை கூடும். மானாவாரி சாகுபடியில் வறட்சியைத்தாங்கும் தன்மை அதிகரிக்கும். பயறு ஒண்டர் நுண்ணுட்டத்தை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவம் கலந்து இலை வழி உரமாக தெளிக்க வேண்டும். பயறு ஒண்டர் பயறு சாகுபடியில் வறட்சியை தாங்கி, அதிக மகசூல் தரச்செய்யும்.
இலைவழி ஊட்டத்தின் பயன்கள்: பயறு வகைகளில் புரதம் அதிகமாக இருப்பதால், இந்தப்புரத மாற்றத்துக்கு மணிச்சத்து மிகவும் அவசியம். இது நிலத்தில் இருந்து கிடைப்பதைவிட இலை மூலம் எளிதில் கிடைக்கிறது. மேலும், பயிர்கள் பூத்த பிறகு, வேர்கள் வாயிலாக சத்துகளை எடுக்கும் தன்மையும், நிலத்தில் இருந்து சத்துகள் கிடைப்பதும் குறைந்து விடும். எனவே இலை மூலம் கொடுக்கப்படும் தழைச்சத்து, மணிச்சத்துள்ள டிஏபி கரைசல் பயிருக்கு நல்ல பயனை அளிக்கும். பூத்த பிறகு இலைகளில் உற்பத்தியாகும் மாவுச்சத்தே விதைகளில் சேமிக்கப்படுகிறது. எனவே, டிஏபி மூலம் கிடைக்கும் தழைச்சத்து, இலைகளை பச்சையாக வைத்திருந்து, அதிக மாவுச்சத்து உற்பத்திக்கு உதவுகிறது.
பயிரில் பூச்சி, நோய் எதிர்ப்புச்சக்தி மற்றும் மணியின் எடையைக் அதிகரிக்க, பூ, பிஞ்சுகள் உதிர்வதை தடுத்து அதிக காய்கள் பிடிக்க ‘பயறு ஒண்டர்’ உதவுகிறது. இந்த பயறு ஒண்டர் நுண்ணுாட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் கல்லுாரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையம், வேளாண் அறிவியல் நிலையங்களில் பெற்று பயறுவகை பயிர்களுக்கு விவசாயிகள் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் ராஜா பாபு தெரிவித்துள்ளார்.
The post வையாளி கண்டருளிய நம்பெருமாள் பயறு வகையில் உயர் விளைச்சல் பெற‘பயறு ஒண்டர்’ பூஸ்டர் கலவை பயன்படுத்தலாம்: விவசாயிகளுக்கு ஆலோசனை appeared first on Dinakaran.