வைகையில் கழிவுநீர் தடுக்க சிசிடிவி கேமரா கண்காணிப்பு: அபராதம் விதிக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவு

4 weeks ago 5

மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், வைகை ஆற்றில் பல இடங்களில் தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் கழிவுநீர் கலக்கிறது. தேனி முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரை பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சிறப்புக்குழு அமைத்து, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். வைகை ஆற்றை அசுத்தப்படுத்துபவர்களிடம் இழப்பீடு வசூலித்து, மறுசீரமைக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கலெக்டர்கள் ஆய்வில் தேனி மாவட்டத்தில் 29 இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 இடங்களிலும், மதுரை மாவட்டத்தில் 41 இடங்களிலும் கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பது தெரியவந்துள்ளது. இப்படி 35 ஆண்டுகளாக வைகையில் கலக்கிறது. நீர்வளத்துறை, நகராட்சி, சுற்றுச் சூழல் உள்ளிட்ட 5 துறை செயலாளர்கள் ஆலோசித்து இதை தடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்க உள்ளனர்.

எனவே, கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் எந்தவிதமான உறுத்தலுமின்றி கழிவுநீரை வைகை ஆற்றில் கலக்கின்றன. வரும் காலங்களில் இது போன்று நடக்கக் கூடாது.

அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். வைகையில் கழிவு நீர் கலப்பவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். வைகை ஆற்றில் எங்கெங்கு கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. இதை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 5 துறை செயலாளர்கள் கலந்து பேசி ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

The post வைகையில் கழிவுநீர் தடுக்க சிசிடிவி கேமரா கண்காணிப்பு: அபராதம் விதிக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article