காரியாபட்டி : வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் காரியாபட்டி, மல்லாங்கிணற்றில் நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் மல்லாங்கிணறில் நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இதையடுத்து வைகை கூட்டு குடிநீர் திட்ட பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணற்றில் முறையே 80 ஆயிரம் மற்றும் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது.
தொட்டி கட்டுவதற்கான இடங்களை பேரூராட்சி தலைவர் செந்தில், செயல் அலுவலர் முருகன், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
36 ஆயிரம் பேர் பயனடைவர்
இத்திட்டத்திற்கு தேவைப்படும் குடிநீரினை, வைகை ஆற்றில் 11 நீர் உறிஞ்சு கிணறுகளிலிருந்து 3.96 கிலோ மீட்டர் நீளம், 100 எம்எம் விட்டமுள்ள இரும்பு குழாய்கள் வழியாக 9.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பின்பு 2.38 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள 1.80 லட்சம் லிட்டர் மேல் சமநிலை நீர்தேக்கத் தொட்டிக்கு உந்தப்பட்டு, அங்கிருந்து 58.61 கிலோ மீட்டர் நீளமுள்ள இரும்பு குழாய் மற்றும் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் தன்னோட்ட குழாய்கள் மூலம் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு முறையே 80 ஆயிரம் மற்றும் 1.00 இலட்சம் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு அனுப்பப்படவுள்ளது.
அங்கிருந்து, அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் குழாய், 13.79 கிலோ மீட்டர் பதிக்கப்படுவதன் மூலம் காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள 23 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் மற்றும் 13.98 கிலோ மீட்டர் பதிக்கப்படுவதன் மூலம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள 22 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீர் உந்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இத்திட்டம் நிறைவுறும் போது இவ்விரு பேரூராட்சிகளிலும் உள்ள 36,200 பேர் பயனடைவர்.
The post வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நீர்த்தேக்க தொட்டி கட்ட அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.