திருத்தணி: திருத்தணியில் நேற்றிரவு சந்தான வேணுகோபால சுவாமி வீதியுலா விமரிசையாக நடந்தது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான எஸ்விஜி.புரம் சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தேவி-பூதேவி சமேதராக சந்தான வேணுகோபால சுவாமி தரிசனம் தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 8 மணியளவில் சிறப்பு மலர் அலங்காரத்தில் தேவி-பூதேவி சமேதராக உற்சவர் சந்தான வேணுகோபால சுவாமி மேளதாளங்கள் முழங்க, கிராம வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் பக்தர்களில் அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டி வழிபட்டனர். இதேபோல் திருத்தணியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், நந்தி ஆற்றங்கரையில் விஜயராகவ பெருமாள் கோயில், பள்ளிப்பட்டில் தேவி-பூதேவி சமேதராக வரத நாராயணசாமி கோயில், பொதட்டூர்பேட்டையில் தரணி வராகசுவாமி கோயில், திருவாலங்காட்டில் வைகுண்ட பெருமாள் கோயில்களில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
The post வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருத்தணியில் சந்தான வேணுகோபால சுவாமி வீதியுலா appeared first on Dinakaran.