திருச்சி,
108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி விழா முக்கியமானதாகும். பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வர்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 30-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9-ந்தேதி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழிப்பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
16-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றது. 19-ந் தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி, 20-ந் தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 6 லட்சம் பக்தர்களும், 9-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி நாள் அன்று 2.75 லட்சம் பக்தர்களும் தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் ராப்பத்து உற்சவத்தில் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 7 லட்சம் பக்தர்களும், 16-ந் தேதி திருக்கைத்தல சேவையன்று 1 லட்சம் பேரும், 17-ந்தேதி வேடுபறியன்று 1 லட்சம் பேரும் தரிசனம் செய்துள்ளனர். 19-ந் தேதி 70 ஆயிரம் பேரும் விழாவின் நிறைவு நாளான 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்தன்று 1 லட்சம் பக்தர்களும் தரிசனம் செய்துள்ளனர். விழா நாட்கள் முழுவதும் மொத்தம் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.