சென்னை,
இயக்குனர் அமீர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'பருத்திவீரன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன், படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
தமிழ் சினிமா கலைஞர்களில் ஒரு சில கலைஞர்கள் மட்டுமே அரசியல் குறித்தும் சமூகம் குறித்தும் மிக தைரியமாக எல்லா காலகட்டத்திலும் பேசக்கூடியவர்களில் இயக்குநர் அமீரும் ஒருவர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பலவேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சீமான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
'யாருக்கெல்லாம் பெரியார் தேவையில்லையோ அவரை விட்டு ஒதுங்கி எங்களுக்கு வழி விடுங்கள்...எங்களுக்கு பெரியார் வேண்டும் எங்களை வாழ விடுங்கள்' என்று நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இயக்குநர் அமீர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
பெரியாருடன் தான் இருப்பதைப் போன்ற ஓவியத்தைப் பகிர்ந்த அமீர் 'ஐயா நீங்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரியா?... ஈழத்திற்கு எதிரானவரா?... போராளி பிரபாகரனுடன் முரண்பட்டீர்களா?... பின் எதற்கு உங்கள் கைத்தடிக்கும் புலிகளின் துப்பாக்கிக்கும் சண்டை?" என்று பெரியாரிடம் கேள்வி கேட்பது போல் பதிவிட்டுள்ளார் அமீர். மேலும் புலிகளின் ஆதரவாளர்களையும் பெரியாரையும் மோத விடும் சூத்திரதாரி யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.