தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதன் முத்தாய்ப்பாக ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2025 – 2026 நிதியாண்டுக்காக வேளாண் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்கள் குறித்து ஒரு பார்வை.
* கடலூர் மாவட்டத்தின் நல்லூர் வரகு, நாகப்பட்டினம் வேதாரண்யம் முல்லை மலர், திண்டுக்கல் நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா மற்றும் கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
* மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி ஒதுக்கீடு.
* ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ள நடவடிக்கை.
* உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில் உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம்.
* பருத்தியின் உற்பத்தியை அதிகரித்திட ரூ.12.21 கோடியில் பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம். உழவர்களின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை.
* முந்திரி சாகுபடியை அதிகரிக்கவும், முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைப்பு.
* திருவண்ணாமலை, நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பத்தூர், திருநெல்வேலி, வேலூர், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கோவை ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள 63,000 மலைவாழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் சிறுதானியங்கள் சாகுபடி, இடுபொருட்கள் வினியோகம், காய்கறிப் பயிர்கள் விரிவாக்கம், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பம், நுண்ணீர் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணைகள் அமைக்க மானியம் வழங்கப்படும். விவசாயிகள் கடன் அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலா சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
* முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம் ரூ.24 கோடி செலவில் 1000 விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை.
* பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.1.65 கோடி நிதி ஒதுக்கீடு.
The post வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற இனிப்பான அறிவிப்புகள்! appeared first on Dinakaran.