வேளாண் துறையில் வளர்ச்சியையும் விவசாயிகளின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

2 days ago 5

சென்னை: வேளாண் துறையில் வளர்ச்சியையும் விவசாயிகளின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2024-25ம் ஆண்டில் 9.69 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கிறது. இது மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கக் கூடியதுதான் என்றாலும், வேளாண் துறையின் வளர்ச்சி வெறும் 0.15 சதவீதம் ஆக குறைந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

அடிப்படையில் வேளாண்மையை சார்ந்த மாநிலமான தமிழ்நாடு, விவசாயிகள் முன்னேறாமல் முன்னேற முடியாது என்ற உண்மையை அறிந்திருந்தும் வேளாண் வளர்ச்சிக்காக முன்னோக்கு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு இதுவரை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. நெல்லுக்கான கொள்முதல் விதையை குண்டாலுக்கு ரூ.3,500ஆக உயர்த்த வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், இதில் 60 விழுக்காடு அளவுக்கு மட்டும் தான் கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. உழவர்களின் சுமையைப் போக்க ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. அந்தக் கோரிக்கையும் இன்றுவரை ஏற்கப்படவில்லை. வேளாண்துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

அதற்காக அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தல், குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைத்தல் போன்றவற்றுக்காக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படவேண்டும். அதன் மூலம் வேளாண் துறை வளர்ச்சியையும், உழவர்களின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும்.

The post வேளாண் துறையில் வளர்ச்சியையும் விவசாயிகளின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article