* 1000 இடங்களில் உழவர் நல சேவை மையம்
* ரூ.349 கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை
* 4 ஆண்டுகளில் 1.81 லட்சம் மின் இணைப்பு
சென்னை: தமிழக பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.45,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ.1477 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் உழவர் நல சேவை மையம் அமைக்கப்பம். கரும்புக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.349 ஆக உயர்த்தப்படும். 4 ஆண்டுகளில் 1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசின் 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது: 2019-20ம் ஆண்டில் 146 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடிப் பரப்பு, 2023-24ம் ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. மேலும், 2019-20ம் ஆண்டில் 29 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கராக இருந்த இருபோக சாகுபடி பரப்பு 2023-24ம் ஆண்டில் 33 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் என்ற அளவினை எட்டியுள்ளது. தமிழ்நாடு அகில இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தித் திறனில் முதல் இடத்திலும், மக்காச்சோளம், எண்ணெய்வித்துகள், கரும்பு ஆகியவற்றில் இரண்டாம் இடத்திலும், நிலக்கடலை, குறுதானியங்கள் உற்பத்தித்திறனில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. 2021-22 முதல் 2023-24ம் ஆண்டு வரை 346 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் உணவுதானிய உற்பத்தி அடையப்பட்டுள்ளது.
இதுவரை, ஒரு லட்சத்து 81 ஆயிரம் பாசன மின் இணைப்புகள் உழவர்களுக்கு வழங்கப்பட்டு, வறண்ட நிலங்களும் வளம் பெற்றுள்ளன. நான்கு ஆண்டுகளில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ், 55,000 உழவர்களுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. 2021-22ம் ஆண்டு முதல் வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டத்தில் 435 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு அவர்கள் கிராமப்புறங்களில் வேளாண்மை செழிக்க உதவி வருகின்றனர். இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், உழவர்களின் தேவைகளை நிறைவேற்றும் புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, உழவர் நலன் மேம்படும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளன. இந்த நிதிநிலை அறிக்கை, வேளாண் பெருமக்கள் மிடுக்காக நடைபோட்டு, மகிழ்ச்சி அடையும் விதமாகப் புதுப்பொலிவுடன் சிறப்பான திட்டங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* வேளாண்மை செழித்திட உதவிடும் வகையில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தில், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான இந்த மையங்கள் அமைத்திட 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கென ரூ.42 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தமிழ்நாட்டில் டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் சராசரியாக 34 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில் நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து, உணவு தானிய உற்பத்தியினை உயர்த்திட டெல்டா அல்லாத மாவட்டங்களில் சிறப்புத் தொகுப்பு உழவர்களுக்கு வழங்கப்படும். நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள் உள்ளிட்டவற்றுக்கு 102 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 79 ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில், 40 கோடியே 27 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
* 2025-26ம் ஆண்டிலும், ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் ஒரு லட்சம் உழவர்கள் பயன்பெறும் வகையில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடிப் பரப்பு, உற்பத்தியை அதிகரித்து சர்க்கரை ஆலைகள் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கவும், கரும்பு உழவர்கள் கூடுதல் வருவாய் பெறும் வகையிலும், 2024-25 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து கரும்பு வழங்கிய தகுதியுள்ள உழவர்களுக்கு, ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல், முன் எப்போதும் இல்லாத அளவில், டன் ஒன்றுக்கு 349 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் கரும்புக்கு, டன் ஒன்றிற்கு 3,500 ரூபாய் வழங்கப்பட்டு, சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கரும்பு உழவர்கள் பயன்பெறுவர். இதற்கென, ரூ.297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
* ”ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்னும் புதிய திட்டம் தமிழ்நாட்டில் 2025-26ம் ஆண்டில் 125 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
* மூன்று லட்சம் ஏக்கரில் ஆயிரத்து 168 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவப்படும்.
* வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தில், 2025-26ம் ஆண்டில் 17 ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில் 215 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
* 2021-22ம் நிதியாண்டு முதல் நடப்பு நிதியாண்டில் 11.3.2025 வரை 67 லட்சத்து 81 ஆயிரம் விவசாயிகளுக்கு 54,800 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடனும், 12 லட்சத்து 24,000 பேருக்கு 6,588 கோடியே 16 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடை பராமரிப்பு கடனும் வழங்கப்பட்டுள்ளன. 2021-22ம் நிதியாண்டு முதல் வட்டி மானியம் மற்றும் உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தியதற்கான வட்டி ஊக்கத்தொகை 2,162 கோடியே 84 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டில் வட்டி மானியத்திற்கென 853 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினைச் செயல்படுத்தும் பொருட்டு, மொத்த பயிர்க் கடன் தள்ளுபடியான 12,110 கோடியே 74 லட்சம் ரூபாயில், தற்போதுவரை, தள்ளுபடித்தொகையாக 10,336 கோடியே 40 லட்சம் ரூபாயும், தள்ளுபடித்தொகை மீதான வட்டியாக 1,811 கோடியே 90 லட்சம் ரூபாயும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. 2025-26ம் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கென 1,477 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு, 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உழவர்களிடையே நீர்ப் பாசன வசதியை மேம்படுத்துவதற்காக, இதுவரை 23 லட்சத்து 74 ஆயிரத்து 741 இலவச மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளன. 2024-25ம் ஆண்டு இலவச மின்சார மானியமாக இதுவரை 6 ஆயிரத்து 962 கோடியே 93 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டில் உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகளுக்குத் தேவையான கட்டண தொகையாக, சுமார் எட்டாயிரத்து 186 கோடி ரூபாய் நிதியினை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு அரசு வழங்கும். மொத்தத்தில் இந்தாண்டுக்கான வேளாண் துறைக்கு 45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு ரூ.1477 கோடிக்கு பயிர் கடன் தள்ளுபடி: வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் appeared first on Dinakaran.