மலர்ச்சிக்கு வித்தாகும்

2 hours ago 3

விவசாயம் செழிக்க தனிக்கவனம் செலுத்தி வருகிறார் தமிழக முதல்வர். குறிப்பாக விவசாயம் சார்ந்த வேளாண்துறைக்கு தனியாக பட்ஜெட் சமர்ப்பித்து, தேசத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது தமிழ்நிலம். இந்த வகையில் 2025-26ம்ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட், நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், விவசாயத்தின் மலர்ச்சிக்கு வித்தாகும் என்கின்றனர் வேளாண் முன்னோடிகள்.
குறிப்பாக வளமான விவசாயம் என்பது பருவநிலை மாற்றத்தை, அதிக பாதிப்பில்லாமல் எதிர்கொள்வதன் மூலமே சாத்தியமாகும்.

இதை கருத்தில் கொண்டு, வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ‘டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி, காலநிலை மாற்றத்தால் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள ₹135கோடியில் திறனுள்ள கிராமங்கள் உருவாக்கம் என்ற அறிவிப்பு, விவசாயிகளை மட்டுமன்றி வேளாண் மேம்பாட்டு ஆய்வர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 56.41லட்சம் ஏக்கர் மானாவரி நிலங்களில், பருவமழையை மட்டுமே ஆதாரமாக கொண்டு பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனவே, நடப்பாண்டில் 3லட்சம் ஏக்கரில் கோடைஉழவு செய்திட ₹24கோடி மாநில நிதி ஒதுக்கப்படும்.

தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ₹61கோடியில் நீர்வடிப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இப்படி சமவெளியில் விவசாயம் சிறப்பதற்கான எண்ணற்ற திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. அதேநேரத்தில், மலைவாழ் விவசாயிகள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தவும், திட்டங்களை அறிவித்திருப்பது மேலும் கவனம் ஈர்த்துள்ளது. 63ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயன்பெறும் வகையில், குறுதானிய சாகுபடி, இடுபொருட்கள் விநியோகம், காய்கறி பயிர்களில் பரப்பு விரிவாக்கம், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டுதல், நுண்ணீர் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றுக்கு மானியம் வழங்க ₹22.80கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில் அறிவிக்கப்பட்டுள்ள மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம், தனி முத்திரை பதிக்கும் என்கின்றனர் விவசாயிகள். இவை அனைத்திற்கும் மேலாக, தமிழ்நாட்டை பொறுத்தவரை, மக்களை தேடி திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் முதன்மை மாநிலமாக உள்ளது. மக்களுடன் முதல்வர், மக்களை தேடி மருத்துவம், மக்கள் மருந்தகம் என்று பல்வேறு திட்டங்கள் இதற்கான சாட்சியங்கள். இந்தவகையில் தற்போதைய வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள ‘உழவரை தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை’ திட்டமும் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், சார்பு துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள், வருவாய் கிராமங்களுக்கு செல்வர். அவர்கள் அங்குள்ள விவசாயிகளை நேரடியாக சந்தித்து, தேவையான ஆலோசனைகளை வழங்குவர். விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பயிர்சார்ந்த தொழில் நுட்பங்களையும் எடுத்துக்கூறுவர். மாதம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இந்த நிகழ்வு நடக்கும் என்ற அறிவிப்பு அற்புதமானது. இது தேசத்திற்கே முன்னோடியாக மாறப்போகும் ஒரு மைல் கல் திட்டமாக மாறும் என்பது முன்னோடி விவசாயிகளின் அதீத நம்பிக்கை.

The post மலர்ச்சிக்கு வித்தாகும் appeared first on Dinakaran.

Read Entire Article