திருவண்ணாமலை, மே 25: திருவண்ணாமலை மாநகராட்சி ஈசான்ய மைதானத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு முகாமினை கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்தான முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான ஒரு நாள் முகாமை கலெக்டர் தர்ப்பகராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார். இம்முகாமில், தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரிக்கும் முறை. பழுதுகளை கண்டறியும் முறை, உதிரிபாகங்கள். மசகு எண்ணெய் மற்றும் உயவு பொருட்கள் பயன்பாடு குறித்த தெளிவுரை ஆகியவை வேளாண் இயந்திர உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்தும் வகையில் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.
மேலும் முகாமில் புதிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வேளாண்மை பொறியியல் துறையின் கரும்பு அறுவடை இயந்திரம் தேங்காய் பறிக்கும் இயந்திரம் மற்றும் நடமாடும் வேளாண் இயந்திரங்கள் பழுதுபார்க்கும் வாகனம் முதலியவை காட்சிப்படுத்தப்பட்டது. அதேபோல், குறைந்த செலவில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும்போது, நேரமும், செலவும் குறையும்., அதிக பரப்பளவுக்கு மருந்து தெளிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 1575 விவசாயிகளுக்கு ரூபாய் 21 .12 கோடி மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இம்மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 6 கரும்பு அறுவடை இயந்திரங்கள் ரூபாய் 2.65 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இ-வாடகை செயலியின் மூலம் 1022 விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை பயன்படுத்தியுள்ளனர். 207 விவசாயிகளுக்கு ரூபாய் 28.61 லட்சம் மானியத்தில் மின் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. 30 விவசாயிகளுக்கு ரூபாய் 54 லட்சம் மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த முகாமில் சுமார் 15 தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், ஆர்டிஓ ராஜ்குமார். வேளாண் செயற்பொறியாளர் சண்முகநாதன், துறைச் சார்ந்த அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.