வேளச்சேரி ரயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

3 weeks ago 12

வேளச்சேரி: வேளச்சேரி பறக்கும் ரயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை நேற்று போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கடும் மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்தது. பெருநகர சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 22ம் தேதி இரவு ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு, வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் வேளச்சேரி காவல்நிலைய மற்றும் ரயில்வே போலீசார், மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு சோதனை பிரிவினர் வேளச்சேரி ரயில்நிலைய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில், ரயில் நிலையத்தில் எவ்வித வெடிகுண்டுகளும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.

இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், வேளச்சேரி ரயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் அரியலூர் மாவட்டம், திருமழாபாடியைச் சேர்ந்த ஜோதிவேல் (62) எனத் தெரியவந்தது. அந்த எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய பெண், தனது தந்தை மதுபோதையில் உளறியதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திருமழாபாடிக்கு நேற்று தனிப்படை போலீசார் விரைந்து சென்று, அங்கு வீட்டில் இருந்த ஜோதிவேலை கைது செய்தனர். பின்னர் அவரை வேளச்சேரிக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு வெளிவந்துள்ளார். இதனால் அவரை உறவினர்கள் கண்டுகொள்ளவில்லை. மேலும், சுயதொழில் துவங்க அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் கடனுதவி கிடைக்கவில்லை. நீண்ட காலமாக எவ்வித வேலையும் கிடைக்காத விரக்தியில், வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பியதாக தெரியவந்தது. மேலும், அவர் கடும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

The post வேளச்சேரி ரயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article