வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் மினி டைடல் பூங்காக்கள்!

3 months ago 16

"2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர், அதாவது ரூ.84 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக்காட்டுவேன்" என்று சூளுரைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதை செயல்படுத்தும் வகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 7, 8-ந்தேதிகளில் சென்னையில் தொழில் துறை சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தினார். இதில் இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், தென்கொரியா நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்களும் பங்கேற்றன.

இந்த மாநாட்டின் மூலம் மொத்தம் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில், 403 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நிறுவனங்கள், அதாவது 9 மாதங்களில் 64 சதவீத நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

அதுபோல, அண்மையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தின்போது 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான ரூ.7,616 கோடி மதிப்பில் 19 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவை அனைத்தும் முன்னணி நிறுவனங்கள் என்ற வகையில், பெரும்பான்மையான ஒப்பந்தங்கள் செயல்வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் நிறைய வேலைவாய்ப்புகளை கை நிறைய சம்பளத்துடன் வழங்குகிறது. அந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் தமிழ்நாட்டில் டைடல் பூங்காவை சென்னையில் அமைக்க திட்டமிட்டு அதை அப்போதைய பிரதமர் வாஜ்பாயை வைத்து 2000-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி தொடங்க ஏற்பாடு செய்தார். அவர் அன்று போட்ட வித்துதான் இன்று விருட்சமாக தமிழ்நாடு முழுவதும் மினி டைடல் பூங்காக்களாக உருவாகிக்கொண்டிருக்கிறது. கோயம்புத்தூர், விழுப்புரம் நகரங்களில் மட்டுமல்லாமல், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, நாமக்கல், திருப்பூர், ஊட்டியிலும் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகின. கடந்த மாதம் தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவில் தற்போது 30 சதவீத தள ஒதுக்கீடும், சேலம் மாவட்டம் ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவில் 71 சதவீத தள ஒதுக்கீடும் வழங்கப்பட்டு அங்கு அலுவலகம் தொடங்கியுள்ள முக்கிய நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டு ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இவ்வாறு பரவலாக மினி டைடல் பூங்காக்கள் தொடங்கப்படுவதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் தங்கள் ஊர்களிலேயே வேலைவாய்ப்பை பெற முடியும். தகவல் தொழில்நுட்ப தொழிலில் கேந்திரமாக பெங்களூருவும், அடுத்த இடத்தில் தமிழ்நாடும் இருக்கிறது. விரைவில் அந்த இடத்தையும் எட்டிப்பிடித்துவிடும். மொத்தத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்தில் கொடிகட்டி பறக்கும்.

Read Entire Article