கிருஷ்ணகிரி: “முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வகையில் தோல்வி அடைந்ததால், அதை மறைக்க மக்களை திசை திருப்பும் நடவடிக்கையாக பாஜகவை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளரை கேள்வி கேட்க விடாமலும் எதிர்க்கிறார்” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். சைதை துரைசாமி மற்றும் செங்கோட்டையன் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். தண்ணீர் பந்தலை திறந்து வைத்த, அதிமுக துணைப் பொது செயலாளர் கே.பி.முனுசாமி பொதுமக்களுக்கு மோர், பழங்களை வழங்கினார. தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''வக்பு வாரிய விவகாரத்தில் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்ற வகையில் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. இதனால்தான், சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்தும், மக்களவையில் சட்ட முன் வடிவத்தை எதிர்த்து வாக்களித்தோம்.