நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டப்படுவதோடு, இந்த ஆண்டுக்குள் 200 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலின் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் இங்குள்ள கோயில்களில் பல்வேறு பணிகளுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது. அதன் பலனாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மகாதேவர் கோயிலில் கடந்த 2022ம் ஆய்வு நடத்தப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்துள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலிலும் ரூ.1.38 கோடியில் பணிகள் நடத்தப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்தாண்டுக்குள் தமிழகம் முழுவதும் 200 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நல்லாட்சி நடந்து வரும் தமிழ்நாட்டில் சங்கிகளுக்கு இடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மகாதேவர் கோயில்;
இந்துசமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள திருவிதாங்கோடு மகாதேவர் கோயிலிலும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணி முதல் ஹோமங்கள் நடந்தது. காலை 8 மணி முதல் 9 மணி வரை மகாதேவர் மற்றும் பெருமாள் விமானங்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
The post ‘தமிழ்நாட்டில் சங்கிகளுக்கு இடமில்லை’ இந்தாண்டுக்குள் 200 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த திட்டம் : அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.