மயிலாடுதுறை: வரும் தேர்தலில் நிரந்தரமாக குட்பை சொல்வார்கள், தேர்தல் களத்தில் எடப்பாடியை நம்ப அதிமுகவினரே தயாராக இல்லை என்று மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறையில் பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்தார். இன்று காலை வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை திறந்து வைத்தார். அதன் பின்னர் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பங்கேற்றார். தொடர்ந்து, ரூ.48.17 கோடியில் 47 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.113.51 கோடியில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 54,520 பயனாளிகளுக்கு ரூ. 271.24 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியதாவது: திராவிட மாடல் அரசின் இலக்கு எல்லோருக்கும் எல்லாம்.
அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி. அதனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பார்த்து பார்த்து, மக்களின் கருத்துக்களை கேட்டு கேட்டு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு பிரச்னையை தீர்க்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமரை சந்திக்கும்போதெல்லாம் வலியுறுத்துகிறேன். தமிழர்கள் மீதோ, தமிழக மீனவர்கள் மீதோ கொஞ்சமும் அக்கறை இல்லாத ஒன்றிய அரசு, கச்சத் தீவை தாரை வார்த்தது யார் என அவர்கள் அரசியல் மட்டும் தான் செய்கின்றனர். இன்னொரு நாட்டுடன் ஒப்பந்தம் போடும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பாஜ ஆட்சி செய்கிறது. சமீபத்தில் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர், கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றனர். கச்சத்தீவை ஒரு போதும் விட்டுத்தர மாட்டோம் என கூறியுள்ளார்.
இதற்கு ஒன்றிய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுவரை பதில் அளிக்கவில்லை. எனவே பிரதமர் இதில் நேரடியாக தலையிட்டு கச்சத்தீவை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் அரசின் அனைத்து சேவைகளும், திட்டங்களும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நோக்கம். இதில் முக்கியமானது கலைஞர் மகளிர் உரிமை தொகை. இத்திட்டத்தில் தகுதியுள்ள சிலருக்கு கிடைக்கவில்லை என கோரிக்கைகள் தொடர்ந்து வந்தன. தகுதி உள்ள யாரும் இந்த திட்டத்தில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த திட்டத்தை அறிவித்தவுடன் எடப்பாடி பழனிசாமி பயந்து போய் திட்டத்தை பற்றி அவதூறாக பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி மொத்தத்தில் விமர்சனம் என்ற பெயரில் நமக்கு விளம்பரத்தை செய்து கொண்டிருக்கிறார்.
இதற்காக அவருக்கு நன்றி. ஆனால் இந்த திட்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுகிறார். தேர்தலுக்கு முன்பே ஊர் ஊராக சென்று ஒரு பெட்ஷீட் போட்டு உட்கார்ந்து மனு வாங்கினாரே ஸ்டாலின். அதெல்லாம் என்ன ஆனது என்று அதிமேதாவி போல் பேசுகிறார். பெட்ஷீட் போட்டு வாங்கிய மனுக்களை ஒர்க் சீட் ஆக மாற்றி தீர்வு கண்டுள்ளோம். அது தெரியாமல் நான்கு வருடமாக குடும்பத்துடன் ஸ்டாலின் இருந்ததாக சொல்கிறார். என் குடும்பத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்கள் தான். என்றும் நான் அவர்களுடன் தான் இருப்பேன். இருந்தே தீருவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. பேதம் பார்க்காமல் தமிழ்நாட்டு மக்களை தன் குடும்பமாக நினைக்கும் ஆட்சி தான் இந்த ஸ்டாலினின் ஆட்சி. மகளிர் உரிமைத்தொகை உட்பட அனைத்து திட்டங்களும் அதிமுக குடும்பத்தை சேர்ந்த மகளிருக்கும் சென்று சேருகிறது.
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வருவது போல், பஸ்சை எடுத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு விட்டார். மக்கள் ஏமாறவில்லை. பாஜவை நம்பி எடப்பாடி தான் ஏமாந்து விட்டார். டெல்லியின் சதுரங்க வேட்டையில் சிக்கி அதிமுகவை எடப்பாடி அடமானம் வைத்து விட்டார். மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை தேதி, நாள் மாறாமல் சரியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல பேருந்தில் கட்டணம் இல்லா விடியல் பயணம் மூலம் மாதம் 800 ரூபாய்க்கு மேல் மகளிரால் சேமிக்க முடிகிறது. இந்த இரண்டு திட்டமும் பெண்களின் பொருளாதார சமூக விடுதலைக்கான சிறப்பான திட்டங்கள். திராவிட மாடல் அரசின் நான்காண்டு ஆட்சியில் பல்வேறு சிறப்பு திட்டங்களை என்னால் கூற முடியும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனது நான்காண்டு ஆட்சியில் என்ன செய்தார்?.
2026 தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட்பை சொல்வார்கள். மக்கள் இனி ஒருபோதும் உங்களை நம்ப போவதில்லை. ஏன் உங்கள் கட்சிக்காரர்களே தேர்தல் களத்தில் உங்களை நம்ப தயாராக இல்லை. சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் பஸ் போன்று ஒரு பஸ்சை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். அந்த பஸ்ஸில் புகை வரும், அது போல் இவரது பொய்யும் புகையாக வருகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மெய்யநாதன், எம்பி சுதா, கலெக்டர் காந்த், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன், எம்எல்ஏக்கள் நிவேதாமுருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நிரந்தரமாக குட்பை சொல்வார்கள்; தேர்தல் களத்தில் எடப்பாடியை நம்ப அதிமுகவினரே தயாராக இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.