வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆடுகளுக்கு பிஸ்கெட் கொடுத்து காரில் கடத்திய முதியவர் கைது: சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினார்

1 week ago 4

வந்தவாசி: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆடுகளுக்கு பிஸ்கெட் கொடுத்து காரில் கடத்திய முதியவரை சிசிடிவி காட்சிகள் மூலம் வந்தவாசி தெற்கு போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தெற்கு போலீசார் மும்முனி புறவழி சாலையில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை போலீசார் மடக்கி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தார். மேலும் காரை திறந்து பார்த்தபோது அதற்குள் கீரை கட்டுகள், அரிசி, பிஸ்கெட்டுகள் ஆகியவை இருக்கையில் இருந்தது. மேலும் ஆடுகளின் சாணங்கள் இருந்தையடுத்து. காரில் வந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனர்.

அதில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தர்ணாம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுல்தான்(65) என்பதும், இவர் வந்தவாசி சைதானிபீ தர்கா அருகே மேய்ந்து கொண்டிருந்த 3 ஆடுகளுக்கு நைசாக பிஸ்க்கெட் கொடுத்து காரின் இருக்கை அருகே வர வைத்து காரில் ஆடுகளை ஏற்றி நூதன முறையில் திருடிச்சென்றதும் தெரியவந்தது. மேலும் ஆடுகள் திருட்டு சம்பந்தமாக சைதானி பீ தர்கா பகுதியில் பல்வேறு சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஆடுகளுக்கு பிஸ்கட் வழங்கி திருடி சென்றது உறுதியானது.

மேலும் விசாரணையில், இவர் மீது ஏற்கனவே வேலூரில் விருதம்பட்டு, குடியாத்தம் டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடுகளுக்கு பிஸ்கட் கொடுத்து நூதன முறையில் திருடிய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சுல்தானை கைது செய்தனர். மேலும் ஆடுகளை திருடி விற்பனை செய்து வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

The post வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆடுகளுக்கு பிஸ்கெட் கொடுத்து காரில் கடத்திய முதியவர் கைது: சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article