*லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு
வேலூர் : வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 6 மாவட்டங்களுக்கு தேவையான 1209 டன் யூரியா நேற்று சரக்கு ரயிலில் காட்பாடிக்கு கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் விவசாய பயிர்களுக்கு தேவையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வரப்பட்டு வேளாண்மை அதிகாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து காட்பாடிக்கு 1209 டன் யூரியா, 127 டன் பொட்டாசியம் ஆகியவை சரக்கு ரயிலில் நேற்று காட்பாடிக்கு கொண்டு வரப்பட்டது. இவற்றை உதவி இயக்குனர்(தரக்கட்டுப்பாடு) முருகன் முன்னிலையில் லாரிகளில் ஏற்றி அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறுகையில், காட்பாடிக்கு ரயில் மூலம் 1209 டன் யூரியா, 127 டன் பொட்டாசியமும் வந்தது. வேலூருக்கு 709 டன் யூரியா, 52 டன் பொட்டாசியம், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 100 டன் யூரியா, 5 டன் பொட்டாசியம், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 75 டன் யூரியா, 15 டன் பொட்டாசியம், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 100 டன் யூரியா, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 25 டன் யூரியா, 25 டன் பொட்டாசியம், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 200 டன் யூரியா, 30 டன் பொட்டாசியம் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த உரமூட்டைகள் அந்தந்த மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான அளவில் உரங்களை வங்கிகள், உரக்கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 6 மாவட்டங்களுக்கு மங்களூரிலிருந்து 1209 டன் யூரியா ரயிலில் காட்பாடிக்கு வருகை appeared first on Dinakaran.