சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. வேங்கை வயல் வழக்கில் நீதிமன்றத்தில் புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்தது. 750 நாட்களுக்கு பின் உண்மை வெளிவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் வேங்கைவயல். இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுக்கு மேல் ஆகிறது. இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படமால் இருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் என 737 நாட்களாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி மொத்தமாக இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும், 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும், அறிவியல் பூர்வமான முறையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதே சமயம் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு தற்பொழுது இதில் மூன்று பேருக்கு தொடரப்பு இருப்பதாக தெரிவித்தள்ளது. இந்த தகவல் 750 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த வேங்கை வயல் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் பகையின் காரணமாகவே வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழி வாங்கும் நோக்கில் குற்றம் புரிந்துள்ளனர். சிபிசிஐடி விசாரணை முடிந்து புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என தமிழ்நாடு தகவல் தெரிவித்துள்ளது. முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் குடிநீர் தொட்டி மீது ஏறிய இந்த குற்ற செயலில் ஈடுபட்டனர். வேங்கை வயல் விவகாரத்தில் முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பினார்.
விசாரணை முடிவடைந்து புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு அளித்துள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடிய மனு மீதான விசாரணை பிற்பகல் தள்ளிவைத்தது.
The post வேங்கை வயல் நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.