வேலூர், டிச. 20: வேலூர் உட்பட 4 சிறை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை புழல், வேலூர், சேலம், கடலூர், திருச்சி, கோவை, மதுரை மற்றும் பாளையங்கோட்டை என 8 மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இதில் பெண்களுக்கு புழல், வேலூர் மற்றும் திருச்சியில் தனிச்சிறைகள் உள்ளன. இந்நிலையில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 1000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் சிறையில் 70க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளனர். இதற்கிடையில் வேலூர், திருச்சி, கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மத்திய சிறைகளின் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்திய சிறையின் கண்காணிப்பாளராக உள்ள (பொறுப்பு) பரசுராமன், கடலூர் மத்திய சிறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக உள்ள ஆண்டாள், வேலூர் மத்திய சிறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் சிறை கண்காணிப்பாளர், புதுக்கோட்டைக்கும், புதுக்கோட்டை கண்காணிப்பாளர் சென்னை புழல்-2 சிறைக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் விரைவில் தங்களது புதிய பணிடங்களில் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். தற்போது வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆண்டாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post வேலூர் உட்பட 4 சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.