புதுச்சேரி, பிப். 23: வருகிற 2026 சட்டமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் அகில இந்திய என்ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி முதல்வராக இருந்து வருகிறார். கடந்த 7ம்தேதி நடைபெற்ற என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15ம் ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் வாய்ப்புள்ளது.
என்ஆர்.காங்கிரஸ் மீது புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி, தமிழக மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார். இந்நிலையில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பரத்குமார் (31) தலைமையில் 200க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை புதுச்சேரி வந்து, முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, ஆளுயுர மாலை அணிவித்து என்ஆர்.காங்கிரஸ் கட்சியினர் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டை அணிவித்து முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, காரைக்கால் திருநள்ளாறு எம்எல்ஏ பிஆர்.சிவா, கட்சியின்
செயலாளர் ஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய என்ஆர். காங்கிரஸ் தொடங்கும்போது அடுத்து தமிழகத்திலும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் தலைவர்கள் பலர் வந்தார்கள், கேட்டார்கள். அதற்கு எதுவும் சொல்லாமல், புதுச்சேரியில் போட்டியிட்டு ஆட்சி அமைத்தோம். மறுபடியும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் இருந்து வருகிறோம். இப்போது தமிழகத்திலும் அகில இந்திய என்ஆர்.காங்கிரஸ் வர வேண்டும் என நிறைய நண்பர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
தமிழகத்துக்கு செல்லும்போது, எப்போது தமிழகத்திற்கு வருவீர்கள் என பலரும் என்னிடம் கேட்டார்கள். ஆகையால், தமிழகத்திலும் என்ஆர்.காங்கிரஸ் செல்லலாம், சேர்ந்து பணியாற்றலாம், அங்குள்ள நண்பர்களுக்கு என்ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பை உண்டாக்கி கொடுக்கலாம் என முடிவெடுத்து, கட்சி ஆண்டு விழாவில் இதுபற்றி நான் தெரிவித்து இருந்தேன்.
அதன்பேரில், வேலூரில் இருந்து பரத் என்பவர் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இன்னும் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் பல பகுதிகளில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் விஜய் எனது நண்பர், வேண்டியவர். அதன் அடிப்படையில் எப்போதும் அவருடன் பேசுவது உண்டு. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போது, கூட்டணி எப்படி ஏற்படுகிறதோ, அதற்கு தகுந்தார்போல் என்ஆர். காங்கிரசும் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு தேர்தலை சந்திக்கும். பெஞ்சல் புயலுக்கு ரூ.61 கோடி புதுச்சேரிக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. அதற்கு முன்பே, மத்திய அரசின் அனுமதியுடன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அறிவித்து, நிவாரணம் கொடுத்துள்ளோம்.
விவசாயிகளுக்கும் நிவாரணம் கொடுத்துள்ளோம். பெண்களுக்கான மாத உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம். புதுச்சேரி மாநிலத்தில் எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நிருபர்களிடம் அவரிடம், 2026ல் இப்போதுள்ள கூட்டணி தொடருமா? பாஜ அழுத்தம் கொடுப்பதால்தான் கூட்டணியில் இருப்பதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, முதல்வர் நேரடியாக பதில் அளிக்காமல், இப்போது கூட்டணி ஆட்சியில்தான் இருக்கிறோம் என கூறினார்.
கட்சியில் இணைந்த பரத் குமாரிடம் கேட்டதற்கு, டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளேன். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறேன். பெருந்தலைவர் காமராஜர் வழிநடக்கும் முதல்வர் ரங்கசாமியின் எளிமை, கொள்கையை பிடித்து கட்சியின் இணைந்திருக்கிறேன். வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் ரங்கசாமி அடிக்கடி வருவார். அவரை நாங்கள் பார்ப்போம். அவரது செயல்பாடு எங்களுக்கு பிடிக்கும் என்றார்.
The post வேலூரைச் சேர்ந்த 200 பேர் என்ஆர் காங்கிரசில் இணைந்தனர் தமிழகத்தில் கூட்டணி குறித்து தேர்தலின்போது முடிவு செய்யப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி appeared first on Dinakaran.