வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட போலீஸ்காரரின் மனைவி, குழந்தை இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். இவர் ஆவடி பட்டாலியனில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா (24). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், கர்ப்பமாக இருந்த அனிதா, மாம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வளைகாப்பு முடிந்ததும் சென்றார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி அனிதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பிரசவத்திற்காக வழங்கப்பட்ட தேதி கடந்து சென்றதால் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தாவது பிரசவம் பார்க்கும்படி அனிதாவின் கணவர் கோட்டீஸ்வரன் டாக்டர்களை அணுகிய போது, அலட்சியமாக இருந்தாக தெரிகிறது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் மாலை அனிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை தொடங்கினர். இந்நிலையில் நேற்று காலை பிரசவத்தின் போது ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் தாயும் இறந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அனிதாவின் உறவினர்கள் டாக்டர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களால், மனைவி அனிதாவும், குழந்தையும் இறந்துள்ளதாக கோட்டீஸ்வரன் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் மற்றும் சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேலூரில் பிரசவத்தின்போது சென்னை காவலரின் மனைவி, குழந்தை பலி: டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.