பெங்களூரு,
பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குந்தலஹள்ளியை சேர்ந்தவர் இம்தாத் பாஷா (வயது 35). எச்.ஏ.எல். பகுதியை சேர்ந்தவர் உஸ்மா கான் (30). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததும், எதிர்த்தனர். இதையடுத்து காதலை முறித்து கொண்ட அவர்கள், பெற்றோர் பார்த்தவர்களை திருமணம் செய்து கொண்டனர்.
இருப்பினும் அவர்கள் இருவரும் தங்களது காதலை தொடர்ந்தனர். இதனால் 2 பேரும் கோர்ட்டில் முறையிட்டு விவாகரத்து பெற்றனர். இம்தாத் பாஷா தனது மனைவியையும், உஸ்மா கான் தனது கணவரையும் விவாகரத்து செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் தனியாக வசித்து வந்தனர். விரைவில் அவர்கள் 2 பேரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர்.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் இம்தாத் பாஷா மும்பைக்கு வேலைக்கு சென்றார். அந்த நேரத்தில் உஸ்மாகானுக்கு வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை காதலித்த உஸ்மா கான், திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இது இம்தாத் பாஷாவுக்கு தெரியவந்தது. பெங்களூரு திரும்பிய அவர், உஸ்மாகானிடம் திருமணம் குறித்து பேசவேண்டும் என்று தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் கோபம் அடைந்த இம்தாத் பாஷா, உஸ்மா கானை கொலை செய்தார். பின்னர் இம்தாத் பாஷா, மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, எங்கள் காதலுக்கு முதல் மனைவி மறுப்பு தெரிவித்ததால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று இருவரின் உறவினர்களுக்கும் செல்போனில் குறுந்தகவல் அனுப்பினார். மேலும் அவர் விஷம் குடித்தது போல் நடித்துள்ளார். உடனே உறவினர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எச்.ஏ.எல். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் உஸ்மா கான், இம்தாத் பாஷா விஷம் குடிப்பதற்கு முன்பே இறந்ததது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இம்தாத் பாஷாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது உஸ்மா கான், வேறொருவரை திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரத்தில் அவரை கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு, இருவரும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து இம்தாத் பாஷாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.