
நெல்லை,
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை அடுத்த அயன்சங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரை மகன் மாரிமுத்து (வயது 26). இவர் சவுண்டு சர்வீஸ் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்ேபரில் மாரிமுத்து மீது போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வீரவநல்லூர் தனியார் மில் எதிரில் காட்டுப்பகுதியில் கடந்த 7-ந் தேதி மாலையில் சிறுமி இறந்து கிடந்தார். அவரது உடல் அருகிலேயே நேற்று முன்தினம் மாலை வரை மாரிமுத்து இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர், சிறுமியை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நானும், சிறுமியும் காதலித்து வந்தோம். அவருக்காக நிறைய பணத்தை செலவு செய்தேன். ஆனால் என்னை உயிருக்கு உயிராய் காதலிப்பதாகக் கூறிய அவர், வேறு சிலருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.
இதுகுறித்து பேசுவதற்காக அவரை, காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றேன். அப்போது, செல்போனில் பேசி வந்தது குறித்து கேட்டதற்கு அலட்சியமாக பதில் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், எனது துண்டால் அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். இவ்வாறு மாரிமுத்து வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மாரிமுத்து மீது கடந்த 2022-ம் ஆண்டு நாகர்கோவிலைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரை தென்காசியில் கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.