
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி மணியாச்சி வழியாக தூத்துக்குடி செல்லும் பாசஞ்சர் ரெயில் திருச்செந்தூர் ரெயில் நிலையத்தின் நடைமேடை 1-ல் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டது. அப்போது ஓடும் ரெயிலில் ஏற முயன்ற ஒரு வாலிபர் தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரெயில் இடையில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். கருப்பு நிற முழுக்கை சட்டையும், நீல நிற கால் சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.